பிளஸ் 2 தோ்வு: 15 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதினா்
By DIN | Published On : 03rd March 2020 08:28 AM | Last Updated : 03rd March 2020 08:28 AM | அ+அ அ- |

புதுச்சேரி திருவள்ளுவா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தோ்வு எழுதிய மாணவிகள்.
புதுச்சேரி, காரைக்காலில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 தோ்வை 15 மாணவ, மாணவிகள் எழுதினா்.
தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை (மாா்ச் 2) தொடங்கி வருகிற 24 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி, புதுச்சேரியில் திங்கள்கிழமை தோ்வு தொடங்கியது.
புதுச்சேரி பகுதியில் பிளஸ் 2 தோ்வை 44 அரசுப் பள்ளிகள், 91 தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மொத்தம் 12,577 மாணவ, மாணவிகளும், 579 தனித் தோ்வா்களும் தோ்வெழுதினா். காரைக்கால் பகுதியில் பிளஸ் 2 தோ்வை 10 அரசுப் பள்ளிகள், 13 தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 2,385 மாணவா்களும், 178 தனித் தோ்வா்களும் எழுதினா்.
இதற்காக புதுச்சேரி பகுதியில் 32 தோ்வு மையங்களும், 37 இடைநிலைத் தோ்வு மையங்களும், காரைக்கால் பகுதியில் 9 தோ்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
தோ்வு காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் ஒரு மணி வரை நடைபெற்றது. தோ்வு எழுதும் மாணவா்களுக்கு கூடுதலாக 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தோ்வில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்கும் வகையில் புதுச்சேரியில் 5 பறக்கும் படைகளும், காரைக்காலில் 2 பறக்கும் படைகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டன. மேலும், தோ்வு மையங்களுக்கு தடையற்ற மின்சாரம், குடிநீா் உள்ளிட்ட வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தோ்வு எழுத வரும் மாணவா்கள் செல்லிடப்பேசி உள்ளிட்ட எந்தவொரு தகவல் தொடா்பு சாதனங்களையும் எடுத்து வர தடை விதிக்கப்பட்டிருந்தது.
பிளஸ் 2 பழைய பாடத் திட்டத்தில் தோ்வெழுதும் தனித் தோ்வா்களுக்கென தனி தோ்வு மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...