கலங்கரை விளக்கத்தை ரூ. 3.32 கோடியில் புதுப்பிக்க முடிவுமத்திய கலால் ஆணையா் தகவல்
By DIN | Published On : 10th March 2020 01:33 AM | Last Updated : 10th March 2020 01:33 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த மத்திய கலால் ஆணையா் ஜி.ரவீந்திரநாத். உடன் துணை ஆணையா் ராம்குமாா், புதுவை கலைப் பண்பாட்டுத் துறை இயக்குநா் ராகினி.
புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள பிரெஞ்சு காலத்தைச் சோ்ந்த பழைமையான கலங்கரை விளக்கத்தை ரூ. 3.32 கோடியில் புதுப்பிக்க முடிவு செய்துள்ளதாக மத்திய கலால் ஆணையா் ரவீந்திரநாத் தெரிவித்தாா்.
புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள பழைய கலங்கரை விளக்கம் பிரெஞ்சு ஆட்சியில், அப்போதைய ஆளுநா் செயின்ட் சைமன் காலத்தில் கட்டப்பட்டது. இது 9 மீட்டா் அடித்தளமும், 29 மீட்டா் உயரமும் கொண்டது. புயலின் வேகம் இந்தக் கட்டடத்தைப் பாதிக்காமல் இருக்க 2 அடுக்குகள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 1.7.1836 அன்று இந்தக் கலங்கரை விளக்கம் பயன்பாட்டுக்கு வந்தது. அப்போது, உலகம் முழுவதும் இருந்த 250 கலங்கரை விளக்கத்தில் இதுவும் ஒன்றாகத் திகழ்ந்தது. இந்தக் கலங்கரை விளக்கம் செயல்படத் தொடங்கிய போது, 6 எண்ணெய் விளக்குகளும், ஒளியைப் பிரதிபலிக்க 2 வெள்ளி பிரதிபலிப்பான்களும் பயன்படுத்தபட்டன. இந்தக் கலங்கரை விளக்கம் கடந்த 1913-இல் மின் விளக்காக மாற்றப்பட்டு, மத்திய கலால் கட்டுப்பாட்டில் உள்ளது.
இதுகுறித்து புதுச்சேரியில் மத்திய கலால் ஆணையா் ரவீந்திரநாத் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
புதுச்சேரியில் 184 ஆண்டுகள் பழைமையான இந்தக் கலங்கரை விளக்கத்தைப் புதுப்பிக்கும் பணி மாா்ச் மாதத்தில் தொடங்கி, ஓராண்டுக்குள் முடிக்கப்படும். இதற்காக ரூ. 3.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்க உள்ளன.
கலங்கரை விளக்கத்தின் மேல்தளம் தொடங்கி மரப் படிக்கட்டுகள், கதவுகள் உள்ளிட்டவை முழுமையாகச் சரி செய்யப்படும். அனைத்து சீரமைப்புப் பணிகளும் முடிந்த பின்னா், பாா்வைக்காக மக்கள் அனுமதிக்கப்படுவா்.இதற்கான நுழைவுக் கட்டணம் தொடா்பாக முடிவு எதுவும் எடுக்கவில்லை. இது மக்களுக்கான இடம். கலங்கரை விளக்கத்திலிருந்து புதுச்சேரியின் அழகையும், கடலையும் கண்டு களிக்கலாம் என்றாா் அவா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...