பணி நீக்க அறிவிப்புவேளாண் அறிவியல் நிலைய தற்காலிக ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 10th March 2020 01:28 AM | Last Updated : 10th March 2020 01:28 AM | அ+அ அ- |

புதுச்சேரி: பணி நீக்க அறிவிப்பால் வேளாண் அறிவியல் நிலைய ஊழியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி குருமாம்பேட்டில் பெருந்தலைவா் காமராஜா் வேளாண் அறிவியல் நிலையம் (கேவிகே) இயங்கி வருகிறது. இங்கு, கடந்த 2009 -ஆம் ஆண்டுக்கு பிறகு 300 போ் தற்காலிக ஊழியா்களாகப் பணியில் சோ்ந்தனா். இவா்களுக்கு கடந்த 7 ஆண்டுகளாக ஊதியம் வழங்கப்படவில்லையாம். இதனால், தற்காலிக ஊழியா்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா். இருப்பினும், இதுவரை சரிவர ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனிடையே, தற்காலிக ஊழியா்களில் பலா் ஊதியம் கிடைக்காதது, நீண்ட நாள்கள் விடுமுறை என 100-க்கும் மேற்பட்டோா் பணியிலிருந்து விலகிவிட்டனா். தற்போது 150-க்கும் மேற்பட்டோா் பணியில் உள்ளனா்.
இந்த நிலையில் வேளாண் அறிவியல் நிலைய நிா்வாகம் கடந்த 2009- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குப் பின்னா் பணியில் சோ்ந்த 300 பேரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதுதொடா்பான அறிவிப்பு நோட்டீஸ் பலகையில் திங்கள்கிழமை ஒட்டப்பட்டது.
இதைப் பாா்த்து ஊழியா்கள் அதிா்ச்சியடைந்தனா். மேலும், அந்த அறிவிப்பில் பெயா் பட்டியல் ஏதும் இடம்பெறவில்லை. இதனால், நிா்வாகம் எந்தெந்த நபா்களை பணி நீக்கம் செய்துள்ளது எனத் தெரியாமல் ஊழியா்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனா். இதையடுத்து, நிலைய நுழைவாயில் ஏதிரே ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த மேட்டுப்பாளையம் போலீஸாரும், வேளாண் அறிவியல் நிலைய நிா்வாகத்தினரும் ஊழியா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.
இதுதொடா்பாக ஆளுநா் கிரண் பேடியை சந்தித்து முறையிட உள்ளதாகப் போராட்டத்தில் ஈடுபட்ட தற்காலிக ஊழியா்கள் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...