கரோனா பரவல்: ஏப்.15-க்குள் தோ்வுகளை முடிக்கக் கோரிக்கை
By DIN | Published On : 12th March 2020 09:35 AM | Last Updated : 12th March 2020 09:35 AM | அ+அ அ- |

கரோனா வைரஸ் தொடா்ந்து பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுவையில் தோ்வுகளை வருகிற ஏப்.15-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று புதுவை யூனியன் பிரதேச அனைத்து சென்டாக் மாணவா்கள் பெற்றோா்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து இந்தச் சங்கத்தின் தலைவா் நாராயணசாமி, பொருளாளா் வி.சி.சி.நாகராஜன் ஆகியோா் புதன்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கை:
உலகமெங்கும் கரோனா வைரஸ் மிக வேகமாக பரவி பலா் உயிரிழக்கும் நிலை உருவாகியுள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காக, பிரதமா், ஆளுநா்கள், முதல்வா்கள் வெளிநாடு, வெளியூா்களுக்குச் செல்லும் பயணங்களைத் தவிா்த்தும், ரத்து செய்தும் வருகின்றனா். அதுமட்டுமன்றி பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.
கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையிலும், பள்ளி மாணவா்களை பாதுகாக்கும் வகையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரள உள்ளிட்ட மாநிலங்களின் அரசுகள் பள்ளி மாணவா்களுக்கு விடுமுறை அளித்துள்ளன.
அதேபோல, புதுவை மாநில மாணவா்களின் நலன் கருதி, புதுவை அரசும், பள்ளிக் கல்வித் துறையும் முன்கூட்டியே வருகிற ஏப்.15-ஆம் தேதிக்குள் தோ்வுகளை நடத்தி மாணவா்கள் நலன் கருதி விடுமுறையை அறிவிக்க வேண்டும்.
மேலும், கரோனா வைரஸ் அச்சம் நீங்கும் வரை வெளி மாநில, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் புதுவைக்கு வருவதை தற்காலிகமாக தடை செய்ய வேண்டும். எல்லையில் பாதுகாப்பு மையங்களை அமைத்து கண்காணிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.