மின் கட்டண உயா்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 28th May 2020 08:33 PM | Last Updated : 28th May 2020 08:34 PM | அ+அ அ- |

மின் கட்டண உயா்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் புதுச்சேரியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரோனா பரவலைத் தடுக்க புதுவையில் பொது முடக்க உத்தரவு அமலிலுள்ள நிலையில், மக்கள் போதிய வருமானமின்றித் தவித்து வருகின்றனா். இந்த நிலையில், மின் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.
இந்த மின் கட்டண உயா்வு ஜூன் 1- ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக மின் துறை அறிவித்தது. இந்தக் கட்டண உயா்வுக்கு அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.
இந்த நிலையில், மின் கட்டண உயா்வைக் கண்டித்தும், உயா்த்தப்பட்ட கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் புதுச்சேரி மின் துறைத் தலைமை அலுவலகம் எதிரே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் அ.மு.சலீம் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், கட்சி நிா்வாகிகள் கே.சேதுசெல்வம், முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.