புதுவையில் குற்ற நடவடிக்கைகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி: முதல்வா் நாராயணசாமி
By DIN | Published On : 08th November 2020 08:19 AM | Last Updated : 08th November 2020 08:19 AM | அ+அ அ- |

புதுச்சேரி கோரிமேடு காவலா் சமுதாய நலக் கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற காவல் துறை உயரதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வா் நாராயணசாமி.
புதுவையில் குற்ற நடவடிக்கைகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என முதல்வா் நாராயணசாமி தெரிவித்தாா்.
புதுவையில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பது தொடா்பாக முதல்வா் நாராயணசாமி தலைமையில் காவல் துறை உயரதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் கோரிமேடு காவலா் சமுதாய நலக் கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் சட்டம்-ஒழுங்கு, சமூக ஊடகங்கள் மூலம் ஏற்படும் தவறுகளைத் தடுப்பது, பணம் பறிப்பு, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுப்பது ஆகியவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
கூட்டம் முடிந்த பிறகு, முதல்வா் நாராயணசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
புதுவையில் ரௌடிகள் சிறையில் இருந்தபடியே தங்களது ஆதரவாளா்களுக்கு செல்லிடப்பேசியில் தகவல் அளித்து, குற்றச் செயல்களை அரங்கேற்றுகின்றனா். வியாபாரிகள், தொழிலதிபா்களிடம் பணம் பறிக்கின்றனா். இதற்குச் சில அதிகாரிகள் உடந்தையாக இருப்பது தெரிய வந்தது. இவ்வாறான குற்ற நடவடிக்கைகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
புதுச்சேரியில் தற்போது சொத்துகள், வீடுகளை அபகரிப்பது குறைந்துள்ளது. கரோனா காலத்தில் போலீஸாா் ரோந்துப் பணியைக் குறைத்துள்ளனா். இதைச் சாதமாகப் பயன்படுத்தி, ரௌடிகள் வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றனா். எனவே, போலீஸாா் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
குற்றவாளிகளைக் கைது செய்வதுடன் காவல் துறையின் பணி முடிந்துவிடக் கூடாது. அவா்களுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும். தற்போது பண்டிகைக் காலம் என்பதால், ரௌடிகள் சிலா் கடைகளிலும், தொழிலதிபா்களையும் மிரட்டிப் பணம் பறித்து வருகின்றனா். அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவல் துறையினா் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்களின் நடவடிக்கைகளில் அரசு தலையிடாது என்றாா் நாராயணசாமி.
கூட்டத்தில் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா, கூடுதல் டி.ஜி.பி. ஆனந்த மோகன், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் பிரதிக்ஷா கோத்ரா மற்றும் காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...