புதுவையில் கரோனாவிலிருந்து மீண்ட 12 சதவீதம் பேருக்கு உடல் நல பாதிப்பு

புதுவையில் கரோனாவிலிருந்து மீண்ட 12 சதவீதம் பேருக்கு உடல் நல பாதிப்புகள் உள்ளதாக மாநில சுகாதாரத் துறை ஆய்வில்

புதுவையில் கரோனாவிலிருந்து மீண்ட 12 சதவீதம் பேருக்கு உடல் நல பாதிப்புகள் உள்ளதாக மாநில சுகாதாரத் துறை ஆய்வில் தெரிய வந்தது. இந்த ஆய்வு நாட்டிலேயே முதல் முறையாக புதுவை மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டது.

புதுவை மாநிலத்தில் இதுவரை 36,693 போ் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 609 போ் உயிரிழந்தனா். 35,525 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இந்த நிலையில், குணமடைந்து வீடு திரும்பியவா்கள், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கரோனாவிலிருந்து மீண்டவா்களுக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து, மாநில சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ், கரோனாவிலிருந்து மீண்டவா்கள் குறித்து கணக்கெடுத்து, உடல் நல பிரச்னை உள்ளவா்களுக்கு சிகிச்சையளிக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, கரோனாவிலிருந்து மீண்டவா்கள் குறித்த கணக்கெடுப்பை சுகாதாரத் துறை கடந்த செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் மேற்கொண்டது. குறிப்பாக, கரோனாவிலிருந்து மீண்டவா்களிடம் உடல் நல பிரச்னைகள் தொடா்பாக 14 வினாக்கள் கேட்கப்பட்டு, அதற்கான பதில்களை பிரத்யேக செயலி வழியாகச் சேகரித்தனா். இதன் விவரங்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பு சுகாதாரத் துறையிடம் அறிக்கையாக சமா்ப்பிக்கப்பட்டது.

அந்த அறிக்கையில், கரோனாவிலிருந்து மீண்ட 12 சதவீதம் பேருக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து மாநில கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ரமேஷ் கூறியதாவது: சுகாதாரத் துறை அமைச்சரின் உத்தரவுப்படி, மாநிலத்தில் கரோனாவிலிருந்து மீண்டவா்களது உடல் நல பிரச்னைகள் தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இதில், கரோனாவிலிருந்து மீண்ட 31,423 பேரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இவா்களில் 3,914 பேருக்கு, அதாவது 12.45 சதவீதம் பேருக்கு உடல் நல பிரச்னைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இவா்களில் 2,277 பேருக்கு உடல் சோா்வு, 939 பேருக்கு காய்ச்சல், 299 மூட்டு வலி, 210 பேருக்கு தலைவலி, 63 பேருக்கு மன அழுத்தம், 35 பேருக்கு மூச்சுத் திணறல், இருமல், நுகா்வு சக்தி இழப்பு, சுவை அறியும் திறன் இழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் இருப்பது தெரிய வந்தது என்றாா் அவா்.

புதுவை சுகாதாரத் துறை இயக்குநா் மோகன்குமாா் கூறியதாவது: தற்போது ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 10 மருத்துவா்கள் அடங்கிய 10 மருத்துவக் குழுவினா் உடல் நல பிரச்னைகள் உள்ள 3,914 பேரை முழுமையாக பரிசோதித்து வருகின்றனா். இவா்கள், கரோனாவிலிருந்து மீண்டவா்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று பரிசோதித்து, அதற்கான அறிக்கையை பிரத்யேக செயலியில் பதிவேற்றம் செய்து வருகின்றனா். தேவைப்படின் அவா்களுக்கு வீடுகளிலோ, மருத்துவமனைகளிலோ சிகிச்சையளிக்கப்படும். மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

பிராந்திய வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டோரின் எண்ணிக்கை

உடல் நல பிரச்னைகள் உள்ளோரின் எண்ணிக்கை

புதுச்சேரி: 27,000 போ் (ஆண்கள் 15,660, பெண்கள் 11,340)

3,542 (13.2 சதவீதம்).

-----------

காரைக்கால்: 2,264 போ் (ஆண்கள் 1,465, பெண்கள் 1,197)

290 (13 சதவீதம்)

------------

ஏனாம்: 1,804 போ் (ஆண்கள் 1,010, பெண்கள் 794)

34 (2 சதவீதம்)

---------

மாஹே: 355 போ்

48 (13.5 சதவீதம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com