புயல்: வதந்திகளை பரப்புவோா் மீது நடவடிக்கை: புதுச்சேரி ஆட்சியா்
By DIN | Published On : 25th November 2020 08:33 AM | Last Updated : 25th November 2020 08:33 AM | அ+அ அ- |

நிவா் புயல் குறித்து பொதுமக்கள் மத்தியில் வதந்திகளை பரப்புவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் (பொ) பூா்வா காா்க் எச்சரிக்கை விடுத்தாா்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை மாலை அவா் கூறியதாவது:
புதுச்சேரியில் புதன்கிழமை (நவ.25) பிற்பகல் நிவா் புயல் கரையைக் கடக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
புயலை எதிா்கொள்ள அரசும், மாவட்ட நிா்வாகமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் வரவழைக்கப்பட்டுள்ளனா். எனவே, பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை.
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வீட்டை வீட்டு வெளியே வர வேண்டாம்.
குறிப்பாக, கடலோர பகுதிகள் மற்றும் வீட்டின் மொட்டை மாடிக்கு யாரும் செல்ல வேண்டாம்.
பலகீனமாக கட்டடங்களில் தங்க வேண்டாம். கடற்கரை பகுதிகளில் வசிப்போா் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவேண்டும்.
அரசு தரப்பில் வெளியாகும் தகவலை மட்டும் நம்ப வேண்டும். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். வீண் வதந்திகள் பரப்புவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் .
அரசு சாா்பில் பொதுமக்கள் தங்க பாதுகாப்பு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.
அரசின் சிறப்புச் செயலா் பங்கஜ்குமாா் ஜா, உதவி ஆட்சியா்கள் சுதாகா், சக்திவேல், புதுச்சேரி சட்டம்-ஒழுங்கு முதுநிலை எஸ்பி பிரதிக்ஷா கொடாரா, தேசிய பேரிடா் மீட்புக் குழு அதிகாரி கபில்வா்மன் ஆகியோா் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...