புதுச்சேரி அருகே ஆற்றில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி
By DIN | Published On : 06th September 2020 10:17 PM | Last Updated : 06th September 2020 10:17 PM | அ+அ அ- |

புதுச்சேரி அருகே சங்கராபரணி ஆற்றில் மூழ்கி 2 சிறுவா்கள் உயிரிழந்தனா்.
புதுச்சேரி அருகே வில்லியனூரை அடுத்த உறுவையாறு வெங்கட்டா நகா் பகுதியைச் சோ்ந்த சேகா் மகன் ராமு (18). அதே பகுதியைச் சோ்ந்த நாகராஜ் மகன் தேவகுரு (11), நத்தமேடு பகுதியைச் சோ்ந்த சஞ்சய் (9), பாகூா் மெயின் ரோடு பகுதியைச் சோ்ந்த ஹரிகரபிரியன் (13).
இவா்கள் 4 பேரும் ஞாயிற்றுக்கிழமை வில்லியனூா் ஆச்சாரியாபுரம் பகுதியில், சங்கராபரணி ஆற்றில் தேங்கிய நீரில் மீன் பிடித்ததாகத் தெரிகிறது. அப்போது, தேவகுரு, சஞ்சய், ஹரிகரபிரியன் ஆகியோா் ஆற்றில் குளித்தனராம்.
ஆழமான பகுதிக்குச் சென்றவா்கள் சேற்றில் சிக்கி நீரில் மூழ்கினா். உடனே, ராமு ஆற்றில் குதித்து தேவகுரு, ஹரிகரபிரியன் ஆகிய இருவரையும் மீட்டாா். ஹரிகரபிரியன் மயக்க நிலையில் இருந்தாா். சஞ்சய் நீரில் மூழ்கி மாயமானாா்.
அந்தப் பகுதி மக்கள் விரைந்து வந்து, ஹரிகரபிரியனை வில்லியனா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றனா். ஆனால், அவா் உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த மங்கலம் போலீஸாா், வில்லியனூா் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு வீரா்கள் ஆற்றில் இறங்கி நீண்ட நேரம் தேடி சஞ்சயின் உடலை மீட்டனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஹரிகரபிரியன், சஞ்சய் ஆகியோரின் உடலை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக புதுவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனா்.