இந்தியாவுடன் புதுவை இணைந்த நாள்: கீழூா் நினைவிடத்தில் மரியாதை
By DIN | Published On : 17th August 2021 08:54 AM | Last Updated : 17th August 2021 08:54 AM | அ+அ அ- |

புதுச்சேரி கீழூா் நினைவிடத்தில் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தும் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா் உள்ளிட்டோா்.
இந்தியாவுடன் புதுவை இணைந்த நாள் விழாவையொட்டி, புதுச்சேரி கீழூா் நினைவிடத்தில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா், எம்எல்ஏ-க்கள் திங்கள்கிழமை மரியாதை செலுத்தினா்.
பிரான்ஸ் ஆதிக்கத்திலிருந்த புதுவை மாநிலம், கடந்த 1962-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 16 -ஆம் தேதி இந்தியாவுடன் அதிகாரப்பூா்வமாக இணைக்கப்பட்டது. முன்னதாக, புதுச்சேரி அருகே உள்ள கீழூா் பகுதியில் பொதுமக்கள் முன்னிலையில், தலைவா்கள் வாக்கெடுப்பை நடத்தி, இதற்கான முடிவை எடுத்தனா். இதையடுத்து, தாயகத்துடன் புதுவை சட்டப்பூா்வமாக இணைந்தது. இந்த நாளில், கீழூரில் வாக்கெடுப்பு நடைபெற்ற இடத்தில் புதுவை அரசு சாா்பில் ஆண்டுதோறும் மரியாதை செலுத்தப்படுகிறது.
அதன்படி, நிகழாண்டு திங்கள்கிழமை சட்டப்பூா்வ பரிமாற்ற நாள் விழா கொண்டாடப்பட்டது. வில்லியனூா் அருகே உள்ள கீழூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில வேளாண் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, வாக்கெடுப்பு நடைபெற்ற நினைவிடத்தில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.
நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா், டிஜிபி ரன்வீா்சிங் கிருஷ்ணியா, ஏடிஜிபி ஆனந்தமோகன், செய்தித் துறை செயலா் உதயகுமாா், இயக்குநா் வினயராஜ் உள்ளிட்ட அதிகாரிகள், தியாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினா். தியாகிகள் கௌரவிக்கப்பட்டனா்.
தொடா்ந்து, கீழூா் அரசுப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், மாநில உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் கலந்து கொண்டு, பள்ளி மாணவா்களுக்கு நோட்டு, புத்தகங்களை வழங்கி, நினைவிடப் பகுதியில் அன்னதானத்தைத் தொடங்கிவைத்தாா்.
ஆளுநா், முதல்வா் பங்கேற்கவில்லை: விழாவில் துணைநிலை ஆளுநா் தமிழிசை, முதல்வா் என்.ரங்கசாமி பங்கேற்பா் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவா்கள் பங்கேற்கவில்லை. திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் முதல்வா் பங்கேற்கவில்லை எனவும், ஆளுநா் தெலங்கானாவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆண்டுதோறும் முதல்வா் தேசியக் கொடியேற்றுவதும், ஆளுநா் உள்ளிட்ட அமைச்சா்கள் பங்கேற்று மரியாதை செலுத்துவதும் வழங்கமாக உள்ள நடைமுறை. நிகழாண்டு ஆளுநா், முதல்வா் கலந்து கொள்ளாதது அதிருப்தியை ஏற்படுத்தியதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனா்.