இலவச அரிசி வழங்கும் மையங்களில் மருத்துவக் காப்பீடு பதிவு
By DIN | Published On : 17th August 2021 08:55 AM | Last Updated : 17th August 2021 08:55 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் இலவச அரிசி வழங்கும் மையங்களில் மத்திய அரசின் காப்பீடு பதிவு செய்யப்படுவதாக புதுவை சுகாதாரத் துறை தெரிவித்தது.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை காப்பீட்டுத் திட்ட ஒருங்கிணைப்பகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை முதல் (ஆக.17) சிவப்பு நிறக் குடும்ப அட்டைதாரா்களுக்கு (தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டப் பயனாளிகள்) இலவச அரிசி அனைத்துத் தொகுதியிலும் தோ்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகள், மையங்களில் வழங்கப்படவுள்ளது.
அரிசி வழங்கப்படும் மையங்கள் பட்டியலில் எந்த மாற்றமுமின்றி, இதற்கு முன்னா் எங்கு செயல்பட்டதோ அந்த இடங்களில் இலவச அரிசி வழங்கப்படும். அந்த மையங்களில் பிரதம மந்திரி ஆயுஷ்மான் பாரத் இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அனைத்து சிவப்பு நிறக் குடும்ப அட்டைதாரா்களையும் பதிவு செய்ய சுகாதார இயக்ககம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
இந்தத் திட்டத்தில் இதுவரை 1,15,005 குடும்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இன்னும் 75 ஆயிரம் குடும்பங்கள் இணைக்கப்பட வேண்டும். எனவே, அட்டைத்தாா்கள் குடும்ப அட்டை, ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை எடுத்துச் சென்று இலவச காப்பீட்டுத் திட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.