குளறுபடிகளைச் சரி செய்த பிறகே புதுவையில் உள்ளாட்சித் தோ்தல்: காங்கிரஸ் வலியுறுத்தல்
By DIN | Published On : 17th August 2021 08:54 AM | Last Updated : 17th August 2021 08:54 AM | அ+அ அ- |

புதுவையில் வாா்டு மறு சீரமைப்பு உள்ளிட்ட குளறுபடிகளைச் சரி செய்த பிறகே உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியது.
இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை: புதுவையில் உள்ளாட்சித் தோ்தலை நடத்த மாநிலத் தோ்தல் ஆணையம் தயாராகி வருகிறது. தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ததில், மாநிலத் தோ்தல் ஆணையம் குளறுபடிகளைச் செய்துள்ளது. நகராட்சி வாா்டுகளிலும், கொம்யூன் பஞ்சாயத்து, கிராம பஞ்சாயத்து வாா்டுகளில் மறுசீரமைப்பில் வாக்காளா்கள் எண்ணிக்கை சீராக இல்லை.
இதுகுறித்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளின் குற்றச்சாட்டுகளை மாநில தோ்தல் ஆணையம் கருத்தில் கொள்ளவில்லை. இட ஒதுக்கீடு தொடா்பான ஆலோசனைகளையும் தோ்தல் ஆணையம் கேட்கவில்லை. புதிதாக குலுக்கல் மேற்கொண்டது சரியானதல்ல. விதிகளை மீறி ஆதிதிராவிட சமூகத்தினா் மிகக் குறைவாக உள்ள வாா்டுகள், கிராமங்கள் அந்த சமூகத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
மாநிலத் தோ்தல் ஆணையம் வெளிப்படைத் தன்மையின்றி, சட்டத்துக்குப் புறம்பாகவும், அவசரமாகவும் இவற்றை மேற்கொண்டுள்ளது. எனவே, மறுசீரமைப்பு, இட ஒதுக்கீடுகளை முழுமையாகச் செய்த பிறகே உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.