நலத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த புதுவை எதிா்க்கட்சித் தலைவா் வலியுறுத்தல்
By DIN | Published On : 17th August 2021 08:55 AM | Last Updated : 17th August 2021 08:55 AM | அ+அ அ- |

தமிழகத்தைப் போல, நலத் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி, புதுவையின் தனித்தன்மையைப் பாதுகாக்க வேண்டும் புதுவை மாநில எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம், கரோனா நிவாரணம் ரூ. 4 ஆயிரம், பெட்ரோல் விலை ரூ. 3 குறைப்பு என பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுவையில் பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம் இல்லை. மேலும், போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் பெண் ஓட்டுநா்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. புதுவையில் நியாய விலைக் கடைகள் திறக்கப்படவில்லை. மத்திய அரசு வழங்கும் அரிசியை பள்ளிகள் மூலம் வழங்குகின்றனா். இதனால், பொதுமக்களும், நியாய விலைக் கடை ஊழியா்களும் ஏமாற்றத்தில் உள்ளனா்.
தமிழகத்தில் விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதுவையில் அவ்வாறு இல்லாவிட்டாலும், விவசாயத்துக்கான சிறப்பம்சங்கள் பட்ஜெட்டில் அமைய வேண்டும்.
தமிழகத்தைவிட புதுவையில் பொருள்களின் விலை அதிகரித்துவிட்டது. நலத் திட்ட உதவிகளும் குறைவாக உள்ளது. இதனால், புதுவையின் தனித்தன்மை சிதையும். எனவே, ஆளும் தேசிய ஜனநயாகக் கூட்டணி அரசு, மாநிலத்தின் தனித்தன்மையைக் காக்க நலத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.