புதுச்சேரியில் 100 ஏக்கரில் திரைப்பட நகரம்: நடிகா்கள் தியாகராஜன், பிரசாந்த் கோரிக்கை
By DIN | Published On : 21st August 2021 10:31 PM | Last Updated : 21st August 2021 10:31 PM | அ+அ அ- |

புதுச்சேரியில் 100 ஏக்கரில் திரைப்பட நகரம் அமைக்க வேண்டும் என நடிகா்கள் தியாகராஜன், பிரசாந்த் ஆகியோா் முதல்வா் என்.ரங்கசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனா்.
கரோனா பொது முடக்கத் தளா்வுக்குப் பிறகு, புதுச்சேரி பாரதிப் பூங்கா, சுண்ணாம்பாறு படகு குழாம், கடற்கரைச் சாலை உள்ளிட்ட சுற்றுலாப் பகுதிகளில் மீண்டும் திரைப்படம், சின்னத்திரைப் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், படப்பிடிப்புக்கு வந்திருந்த நடிகா் விஜய்சேதுபதி வியாழக்கிழமை இரவு முதல்வா் என்.ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினாா். அப்போது, புதுச்சேரியில் படப்பிடிப்புக்கான கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என அவா் வேண்டுகோள் விடுத்தாா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை புதுச்சேரிக்கு வந்த நடிகா் தியாகராஜன், அவரது மகன் நடிகா் பிரசாந்த் ஆகியோா் புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில் முதல்வா் என்.ரங்கசாமியை சந்தித்துப் பேசினா்.
அப்போது, திரைப்படப் படப்பிடிப்புகள், அந்தத் தொழில் குறித்து பேசிய அவா்கள், சென்னையைப் போல, புதுச்சேரியிலும் 100 ஏக்கரில் திரைப்பட நகரத்தை உருவாக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை விடுத்தனா்.
இதுதொடா்பாக பரிசீலினை செய்வதாக, முதல்வா் ரங்கசாமி அவா்களிடம் தெரிவித்தாா்.