புதுச்சேரியில் எம்எல்ஏவிடம் ரூ. 15 லட்சம் மோசடி
By DIN | Published On : 21st August 2021 10:36 PM | Last Updated : 21st August 2021 10:36 PM | அ+அ அ- |

புதுச்சேரியில் சுயேச்சை எம்எல்ஏவிடம் ரூ. 15 லட்சம் மோசடி செய்த புகாரில், புரட்சி பாரதம் கட்சி நிா்வாகி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
புதுச்சேரி செல்லிப்பட்டைச் சோ்ந்தவா் பா.அங்காளன் (48). தற்போது திருபுவனை தொகுதி சுயேச்சை எம்எல்ஏவாக உள்ளாா். இந்த நிலையில், நில வணிகத் தொழில் தொடங்குவது தொடா்பாக கடந்த ஜனவரி மாதம் இவரை அணுகிய, முன்னாள் எம்.பி.யின் காா் ஓட்டுநா் ஜெயராமன், புதுவை மாநில புரட்சி பாரதம் கட்சித் தலைவா் ரவியை அறிமுகம் செய்து வைத்தாா்.
நில வணிக தொழிலில் அதிக வருவாய் வரும் என ரவி கூறினாராம். இதை நம்பிய அங்காளன் எம்எல்ஏ, புதுச்சேரி ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள அலுவலகத்தில், தொழில் பங்குத் தொகையாக ரவியிடம் ரூ. 15 லட்சத்தைக் கொடுத்தாராம்.
இதையடுத்து, விழுப்புரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பரிக்கல் பகுதியிலும், புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள ஓரிடத்திலும் மனை வணிகம் தொடா்பாக உடன்படிக்கை செய்து கொண்டதாக ரவி தெரிவித்தாராம். ஆனால், உடன்படிக்கை தொடா்பான ஆவணங்களை அவா் அளிக்கவில்லையாம்.
இதனால், கடந்த ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி அங்காளன் எம்எல்ஏ, தனக்கு ரவியை அறிமுகம் செய்துவைத்த ஜெயராமனுடன் சென்று, உடன்படிக்கை பத்திரத்தைத் தர வேண்டும் அல்லது கொடுத்த பணத்தை தர வேண்டும் என ரவியிடம் கேட்டாராம்.
ஆனால், கூறியபடி ரவி நடந்து கொள்ளாமல், பணத்தையும் கொடுக்கவில்லையாம்.
இதனால், அங்காளன் எம்எல்ஏ புதுச்சேரி பெரியக்கடை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் ரவி மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.