புதுச்சேரி கோளரங்கில் ‘நிழலில்லா நாள்’
By DIN | Published On : 21st August 2021 10:32 PM | Last Updated : 21st August 2021 10:32 PM | அ+அ அ- |

புதுச்சேரி லாஸ்பேட்டை கோளரங்கத்தில் ‘நிழலில்லாத நாள்’ நிகழ்வு குறித்து விளக்கிய அறிவியல் தொழில்நுட்பத் துறையினா்.
புதுச்சேரி கோளரங்கத்தில் ‘நிழலில்லா நாள்’ குறித்த விளக்க நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் இரண்டு நாள்களில் மட்டும் சூரியன் நண்பகல் 12 மணிக்கு நிழல் இல்லாத நிலையை ஏற்படுத்தும். பூமியின் கடக, மகர ரேகைப் பகுதியில் சூரியன் வரும் போது, மட்டுமே இந்த நிகழ்வு நடைபெறும்.
அந்த வகையில் நிகழாண்டு, புதுச்சேரியில் சூரியன் வடக்கு நோக்கிய நகா்வில் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி ‘நிழலில்லாத நாள்’ ஏற்பட்டது. தெற்கு நோக்கிய நகா்வில் சனிக்கிழமை (ஆக. 21) இந்த ‘நிழலில்லாத நாள்’ ஏற்பட்டது.
புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அப்துல் கலாம் அறிவியல் மையம், கோளரங்கத்தில் இந்த ‘நிழலில்லா நாள்’ நிகழ்வு குறித்து விளக்கப்பட்டது. நண்பகல் 12 மணிக்கு நடைபெற்ற இந்த நிகழ்வில் பொதுமக்கள் காணொலிக் காட்சி மூலம் பங்கு கொள்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
புதுவை அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை விஞ்ஞானி வி.வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டு, ‘நிழலில்லா நாள்’ நிகழ்வை செயல் விளக்கங்களுடன் விளக்கினாா். புதுவை அறிவியல் இயக்கம், அறிவியல் தொழில்நுட்பத் துறை ஆகியவை இணைந்து நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டைச் செய்திருந்தன.