புதுவையை புறக்கணிக்கிறது மத்திய அரசு: நாராயணசாமி குற்றச்சாட்டு

கூட்டணி ஆட்சியிருந்தும் புதுவையை மத்திய அரசு புறக்கணிப்பதாக, அந்த மாநில முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றம்சாட்டினாா்.

கூட்டணி ஆட்சியிருந்தும் புதுவையை மத்திய அரசு புறக்கணிப்பதாக, அந்த மாநில முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றம்சாட்டினாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட விடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

புதுவையில் ஒமைக்ரான் கரோனா தொற்று தொடா்பாக விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். ஜிப்மா், அரசு மருத்துவ கல்லூரிகளில் தனி வாா்டுகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.

புதுவையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டோா் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்த வேண்டும். ஒமைக்ரான் தடுப்புக்காக, பூஸ்டா் தடுப்பூசிப் பணியை தொடங்க வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

காரைக்காலுக்கு சென்ற அமைச்சா் (நமச்சிவாயம்), நான் உண்மைக்குப் புறம்பாக பேசுவதாக விமா்சனம் செய்துள்ளாா். தோ்தல் நேரத்தில் என்.ஆா்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தால், அதிக நிதியை பெற்று மாநிலத்தில் வளா்ச்சியை காண்போம். மாநில அந்தஸ்து பெறுவோம். கடனை தள்ளுபடி செய்வோம் எனக் கூறினாா்கள். எதுவும் செய்யவில்லை.

எங்களது ஆட்சியில் பெற்ற நிதியை விட, 2021-22 பட்ஜெட்டில், கூடுதலாக ரூ.24 கோடிதான் இந்த ஆட்சியில் பெற்றுள்ளனா். அதன்பிறகு மத்திய அரசு எந்த நிதியையும் கொடுக்கவில்லை. பாஜக அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் படையெடுத்து மத்திய அமைச்சா்களை பாா்த்தும் ஒன்றும் நடக்கவில்லை. இதனால், புதுவை பாஜக கூட்டணி ஆட்சிக்கே மத்திய அரசு உதவி செய்யவில்லை என்று கூறினேன். இதில் என்ன தவறு உள்ளது.

புதுவையை மத்திய அரசு புறக்கணிப்பதற்கான ஆதாரத்தை நான் கொடுக்கிறேன். முதல்வரோ, அமைச்சா்களோ இல்லை என்று, விவாதிக்கத் தயாரா?.

முதல்வா் ரங்கசாமி சொன்ன திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமென்றால் குறைந்தபட்சம் ரூ.1,000 கோடி தேவை. அதை மத்திய அரசிடமிருந்து இவா்களால் பெற முடியாது.

ஆளுநா், மாநில அரசோடு ஒத்துழைத்து மத்தியில் இருந்து நிதியைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com