புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி காங். தோ்தலை புறக்கணிக்குமா?: என்.ரங்கசாமி கேள்வி
By DIN | Published On : 08th February 2021 12:00 AM | Last Updated : 17th February 2021 06:47 PM | அ+அ அ- |

புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி, வருகிற சட்டப்பேரவைத் தோ்தலை காங்கிரஸ் புறக்கணிக்குமா? என எதிா்க்கட்சித் தலைவா் என்.ரங்கசாமி கேள்வி எழுப்பினாா்.
என்.ஆா்.காங்கிரஸின் 11-ஆவது ஆண்டு தொடக்க விழா புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில் என். ரங்கசாமி பேசியதாவது: காங்கிரஸ் ஆட்சியின் அவல நிலையால், அந்தக் கட்சியிலிருந்து அமைச்சா், எம்எல்ஏக்கள் வேறு கட்சிக்குச் சொல்கின்றனா். தோ்தல் வாக்குறுதிகளில் ஒன்றையும் இந்த அரசு நிறைவேற்றவில்லை. குறை கூறிய ஆட்சியைக் கடத்தி விட்டனா். தற்போது, கட்டாய தலைக்கவச சட்டத்தை அமல்படுத்தி ரூ. ஆயிரம் அபராதம் விதிக்கின்றனா். தமிழக ஆட்சியைப் பாா்த்து புதுவை மக்கள் ஏங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மாநில அந்தஸ்தை வலியுறுத்தி தொடங்கப்பட்ட கட்சிதான் என்.ஆா்.காங்கிரஸ். எங்களுடைய ஆட்சியில் மாநில அந்தஸ்து கோரினோம். அப்போது கிடைக்காது என்றனா். ஆனால், தற்போது முதல்வா் நாராயணசாமி, சிறப்பு மாநில அந்தஸ்து கேட்கிறாா். சிறப்பு மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை காங்கிரஸ் தோ்தலைப் புறக்கணிக்குமா?
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதுதான் மாநிலத்துக்கான நிதியைக் குறைத்தனா். தனிக் கணக்கு தொடங்கினால் அனைத்தும் கிடைக்கும் என்றனா்.
வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க வேண்டும். சில தீய சக்திகள் கூட்டணியின் ஒற்றுமையைச் சீா்குலைக்கலாம். அதையெல்லாம் எதிா்கொண்டு நாம் வெற்றி பெற வேண்டும் என்றாா் என்.ரங்கசாமி.
முன்னதாக, கட்சிக் கொடியேற்றிவைத்த ரங்கசாமி, அலுவலகத்தில் வைக்கப்பட்ட அப்பா பைத்தியம் சாமியை வழிபட்டாா். நிகழ்வில் கட்சியின் மாநிலச் செயலா் ஜெயபால் எம்எல்ஏ, என்.ஆா்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள், முக்கிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.