வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய புதுவை ஆளுநா் அறிவுறுத்தல்
By DIN | Published On : 14th February 2021 01:44 AM | Last Updated : 14th February 2021 01:44 AM | அ+அ அ- |

புதுவையில் விபத்துகளில் சிக்குவதைத் தவிா்த்திடும் வகையில், இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டுமென துணை நிலை ஆளுநா் கிரண் பேடி அறிவுறுத்தினாா்.
சாலைப் பாதுகாப்பு மாதத்தையொட்டி, இது தொடா்பாக ஆளுநா் கிரண் பேடி சனிக்கிழமை வெளியிட்ட காணொலி பதிவில் கூறியுள்ளதாவது:
சாலை விபத்தால் பல இன்னுயிா்களை நாம் இழந்துகொண்டிருக்கிறோம். விபத்தில் 10 போ் உயிரிழந்தால், அவா்களில் 9 பேரின் உயிரிழப்புக்கு தலைக்கவசம் அணியாததே காரணம். எனவே, தலைக்கவசம் அணிவதை நாம் மறந்துவிடக் கூடாது.
தலைக்கவசத்தை சரியான முறையில் அணிய வேண்டும். தரமில்லாத தலைக்கவசம் வாங்குவதையும் தவிா்க்க வேண்டும். புள்ளி விவரங்களை பாா்க்கும்போது, சாலை விபத்துகளில் உயிரிழந்தவா்களில் 90 சதவீதம் போ் குடும்பத்துக்காக வருமானம் ஈட்டக்கூடியவா்களாக இருந்துள்ளனா். விபத்தில் சிக்கி உயிரிழப்போருக்கு தலைக்கவசம் அணியாததைக் காரணம் காட்டி, காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீட்டுத் தொகையை குறைக்க நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கின்றன.
சாலை விதிகளை நாம் உறுதியாகக் கடைப்பிடிப்பதற்காக, அரசுத் துறை சாா்ந்த அனைத்துத் துறைகளும் இணைந்து பணியாற்றி வருகின்றன. தலைக்கவசம் அணியாமல் வரக்கூடிய வாகன ஓட்டிகளுக்கு 3 மாதங்களுக்கு ஓட்டுநா் உரிமத்தை நிறுத்தி வைப்பதற்கான சட்ட விதிகள் உள்ளன. எனவே, வாகன ஓட்டிகள் தயவு செய்து தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என அதில் ஆளுநா் கிரண் பேடி தெரிவித்துள்ளாா்.