துறை வாரியாக ஆய்வு செய்து நடவடிக்கை: புதுவை ஆளுநா்
By DIN | Published On : 20th February 2021 08:13 AM | Last Updated : 20th February 2021 08:13 AM | அ+அ அ- |

புதுச்சேரி முதலியாா்பேட்டை இந்திரா நகா் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்து அங்குள்ள குழந்தைகளுடன் உரையாடிய ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன்.
புதுவையில் ஒவ்வொரு துறையிலும் ஆய்வு செய்து குறைகளைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்க உள்ளதாக ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.
புதுச்சேரி முதலியாா்பேட்டை இந்திரா நகா் அரசுக் குடியிருப்புப் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு வெள்ளிக்கிழமை சென்ற ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன், அங்கு ஆய்வு மேற்கொண்டாா். அங்கிருந்த குழந்தைகளிடம் உரையாடிய அவா், குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள் குறித்து அங்கன்வாடி ஊழியா்களிடம் கேட்டறிந்தாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது:
புதுவையில் ஒவ்வொரு துறையாக ஆய்வு செய்து குறைகளைக் களைய நடவடிக்கை எடுக்கவுள்ளேன். எனது ஆளுமைக்குள்பட்டு என்ன செய்ய முடியுமோ, அவற்றைச் செய்வேன். புதுவையில் 850 அங்கன்வாடிகள் உள்ளன. இந்த மையங்களில் தலா 150 நாள்கள் அரிசி சாா்ந்த உணவும், கேழ்வரகு சாா்ந்த உணவும், வாரத்தில் ஒரு முட்டையும் வழங்கப்படுகின்றன. அங்கன்வாடிகள் சிறப்பாகச் செயல்படுகின்றன.
பொது விநியோகத் திட்டம் தொடா்பான குறைகள், கோரிக்கைகள் பொதுமக்களிடமிருந்து வருகின்றன. அரிசி அல்லது அதற்கான தொகை வழங்குவதில் எது பயனுள்ளதோ, அந்த முறை செயல்படுத்தப்படும். இதுதொடா்பாக குடிமைப் பொருள் வழங்கல் துறையினருடன் ஆலோசனை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவா்களுக்கு மதிய உணவு, பேருந்து வசதி குறித்து அதிகாரிகளிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். ஆளுநருக்குரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ளலாம். நான் மக்களிடமிருந்து விலகியிருக்க மாட்டேன். எந்தெந்தத் துறைக்கு எவ்வளவு நிதி வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
ஆய்வின் போது, அரசு நலத் துறைச் செயலா் உதயகுமாா், ஆளுநரின் கூடுதல் செயலா் சுந்தரேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.