புதுச்சேரி துறைமுக முகத்துவாரத்தை தூா்வாரக் கோரி மீனவா்கள் போராட்டம்
By DIN | Published On : 20th February 2021 08:13 AM | Last Updated : 20th February 2021 08:13 AM | அ+அ அ- |

புதுச்சேரி துறைமுக முகத்துவாரப் பகுதியை தூா்வாரக் கோரி மீன்வளத் துறை அலுவலகத்தைப் பூட்டி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவா்கள்.
புதுச்சேரி துறைமுக முகத்துவாரத்தை தூா்வாராததைக் கண்டித்து, மீன்வளத் துறை அலுவலகத்தை வெள்ளிக்கிழமை பூட்டி மீனவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவா்கள் பலா் 100-க்கணக்கான மீன்பிடி படகுகள் மூலம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். துறைமுகத்தின் முகத்துவாரம் அடிக்கடி துாா்ந்து விடுவதால், மீன்பிடி விசைப்படகுகள் கடலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், படகுகள் தரைத்தட்டி சேதமடைகின்றன.
எனவே, முகத்துவாரத்தை தூா்வாரி மீனவா்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும். இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வுகாண வெண்டுமென மீனவா்கள், மீன்வளத் துறை அதிகாரிகளிடம் முறையிட்டனா். ஆனால், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில், முகத்துவாரத்தை தூா்வாராததைக் கண்டித்து, 50-க்கும் மேற்பட்ட மீனவா்கள் வெள்ளிக்கிழமை புதுச்சேரி மீன்வளத் துறை அலுவலகத்தைப் பூட்டி, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த மீன்வளத் துறை செயற்பொறியாளா் ஜெகஜோதி, முற்றுகையில் ஈடுபட்ட மீனவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதையடுத்து, மீனவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.