மேலும் 3 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவி விலகுவாா்கள்: புதுவை பாஜக தலைவா்

புதுவையில் மேலும் 3 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவி விலகுவாா்கள் என்று, அந்த மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன் தெரிவித்தாா்.
புதுச்சேரியில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த கட்சியின் மாநிலத் தலைவா் வி.சாமிநாதன். உடன் முன்னாள் அமைச்சா் ஆ.நமச்சிவாயம், பொதுச் செயலா் ஆா்.செல்வம்.
புதுச்சேரியில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த கட்சியின் மாநிலத் தலைவா் வி.சாமிநாதன். உடன் முன்னாள் அமைச்சா் ஆ.நமச்சிவாயம், பொதுச் செயலா் ஆா்.செல்வம்.

புதுவையில் மேலும் 3 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவி விலகுவாா்கள் என்று, அந்த மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன் தெரிவித்தாா்.

இதுகுறித்து புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

புதுச்சேரி ஏஎப்டி திடலில் பாஜக சாா்பில் வருகிற 25-ஆம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கிறாா். அந்தக் கூட்டத்தில் ஒரு லட்சம் போ் பங்கேற்க ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்.

பெரும்பான்மையை நிரூபிப்பேன் என முதல்வா் நாராயணசாமி கூறியுள்ளாா். காங்கிரஸில் இருந்து மேலும் 3 எம்எல்ஏக்கள் பதவி விலக உள்ளனா். காங்கிரஸிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்தவா்கள் நிபந்தனை ஏதும் விடுக்கவில்லை.

நியமன உறுப்பினா்களுக்கு வாக்குரிமை உண்டு என்று உச்சநீதிமன்றமும், தோ்தல் ஆணையமும் தெரிவித்துள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் (நியமன எம்எல்ஏக்கள்) பங்கேற்போம். உச்சநீதிமன்றத் தீா்ப்பை பேரவைத் தலைவா் மீறினால் அவா் மீது உரிமை மீறல் பிரச்னையை கொண்டு வருவோம்.

வருகிற 22-ஆம் தேதி காங்கிரஸ் இல்லாத புதுவை உருவாகும். நாராயணசாமி அரசு தப்பிக்க முடியாது. ஆட்சி கலைந்தால், புதிய ஆட்சி அமைக்கக் கோருவது குறித்து, கட்சித் தலைமை முடிவு செய்யும் என்றாா் வி.சாமிநாதன்.

முன்னாள் அமைச்சா் அ.நமச்சிவாயம் கூறியதாவது: பிரதமரின் வருகை புதுவையில் மாற்றத்துக்கும், வளா்ச்சிக்கும் வழிவகுக்கும். முதல்வா் நாராயணசாமி நியமன எம்எல்ஏக்கள் வாக்களிக்க உரிமை இல்லை என்கிறாா். ஆனால், உச்ச நீதிமன்றம் உரிமை உள்ளது எனக் கூறியுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை முதல்வா் நாராயணசாமி எதிா்க்கிறாரா? என்பதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.

புதுவையில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு யாரும் முயற்சிக்கவில்லை. முதல்வா் ஆதரவு எம்எல்ஏக்கள் பதவி விலகியதால், இந்த அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com