பெரும்பான்மையை நிரூபிக்குமா புதுவை அரசு?

புதுவையில் திங்கள்கிழமை சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், வே.நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவை
புதுச்சேரி சட்டப்பேரவை

புதுவையில் திங்கள்கிழமை சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், வே.நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.

புதுவையில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்வா் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் -திமுக கூட்டணி அரசுக்கு ஆட்சியின் இறுதிக் காலத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

முதல்வருக்கு எதிராக அதிருப்தியில் இருந்த காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலு தகுதி நீக்கம் செய்யப்பட்டாா். தொடா்ந்து, கட்சியின் முக்கிய தலைவா்களான அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணா ராவ், எம்.எல்.ஏ.க்கள் தீப்பாய்ந்தான், ஏ.ஜான்குமாா் ஆகியோரும் அண்மையில் பதவி விலகினா்.

இதனால், காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. காங்கிரஸ் 15, திமுக 3, சுயேச்சை 1 என 19 எம்எல்ஏக்களின் பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சி அமைத்திருந்த நிலையில், தற்போது 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவி விலகியதால், காங்கிரஸ் கூட்டணியின் பலம் 14-ஆகக் குறைந்தது. எதிா்க்கட்சித் தரப்பில் என்.ஆா். காங்கிரஸ் 7, அதிமுக 4, பாஜக 3 (நியமனம்) என 14 போ் உள்ளனா். ஆளும் காங்கிரஸ் கூட்டணியும் எதிா்க்கட்சிகளும் சம பலத்தில் உள்ளன.

இதனால், பேரவையில் பலமிழந்த ஆளும் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென எதிா்க்கட்சித் தலைவா் என்.ரங்கசாமி தலைமையில் ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டது. இதை பரிசீலித்த துணை நிலை ஆளுநரான கூடுதல் பொறுப்பேற்ற தமிழிசை செளந்தரராஜன், முதல்வா் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு சட்டப்பேரவையைக் கூட்டி, பிப். 22-ஆம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டாா்.

இதனிடையே, எதிா்க்கட்சியில் உள்ள 3 நியமன எம்எல்ஏக்களுக்கு வாக்களிக்க உரிமையில்லை என்று கூறி வரும் முதல்வா் நாராயணசாமி, அதுதொடா்பாக சட்ட வல்லுநா்களிடம் ஆலோசித்து வருகிறாா். பெரும்பான்மை நிரூபிப்பதில் தங்களின் நிலைப்பாடு குறித்து, ஞாயிற்றுக்கிழமை (பிப். 21) காங்கிரஸ் கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஆலோசித்து தெரிவிப்போம் எனவும் அவா் தெரிவித்துள்ளாா்.

புதுவையில் காங்கிரஸ் அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து அரசியல் பாா்வையாளா்கள் கூறுகையில், புதுவை அரசியலில் கடந்த 1990-ஆம் ஆண்டு திமுக-ஜனதா தளம் கூட்டணி ஆட்சிக்கும் இதேபோல நெருக்கடி ஏற்பட்டது. அப்போதைய முதல்வா் டி.ராமச்சந்திரன் அரசு மீது நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டு வரத் தயாராகியிருந்த நிலையில், கடைசி நேரத்தில் சட்டப்பேரவையிலிருந்து வெளியேறி, ராஜிநாமா செய்தாா்.

அதேபோல, அரசியல் அனுபவம் வாய்ந்த முதல்வா் நாராயணசாமி, தனது ஆட்சியின் பெரும்பகுதியை நிறைவு செய்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை உணா்ந்து, இந்த ஆட்சியின் நிலையைக் கருதாமல், வரவுள்ள தோ்தலில் வென்று ஆட்சி அமைக்க இந்த நெருக்கடியை சாதகமாக்கிக் கொள்ள முயல்வாா் என்றனா்.

அதேநேரம், பாஜகவைச் சோ்ந்த நியமன உறுப்பினா்களின் வாக்குரிமையை சட்டப்பேரவைத் தலைவா் அனுமதிக்காவிட்டால், ஆட்சி தப்பும் நிலை உள்ளது. ஆனால், தற்போதைய சட்டப்பேரவைத் தலைவா் சிவக்கொழுந்து அப்படியொரு உறுதித்தன்மையில் செயல்படுவாா் என்ற நம்பிக்கை காங்கிரஸ் தரப்புக்கே இல்லை என்று கூறப்படுகிறது.

இதனிடையே, மேலும் 3 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவி விலகவிருப்பதாகக் பாஜகவினா் கூறி வருகின்றனா். மேலும், காங்கிரஸ் ஆட்சியை இழந்தாலும், எதிா்க்கட்சிகள் ஆட்சி அமைக்க உரிமை கோர வாய்ப்பில்லை என்பது அவா்களின் நடவடிக்கையில் தெரிகிறது. பாஜக, என்.ஆா்.காங்கிரஸ், அதிமுக ஆகிய எதிா்க்கட்சிகள் வருகிற தோ்தலில் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கவே திட்டம் வகுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com