திருக்காஞ்சி கோயிலில் மாசி மக தேரோட்டம்
By DIN | Published On : 26th February 2021 04:24 AM | Last Updated : 26th February 2021 04:24 AM | அ+அ அ- |

புதுச்சேரி: புதுச்சேரி அருகே திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரா் கோயிலில் மாசி மக தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி வில்லியனூா் அருகே திருக்காஞ்சியில் கங்கைவராக நதீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் நிகழாண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று வருகிறது. இந்த விழா 11 நாள்கள் நடைபெறும்.
விழாவின் 8 -ஆம் நாளான புதன்கிழமை இரவு சுவாமிக்கு திருக்கல்யாணம், ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. தேரில் சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்ட கங்கைவராக நதீஸ்வரா் அருள்பாலித்தாா்.
விழாவில் இந்து அறநிலையத் துறை ஆணையா் சிவசங்கரன், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா். முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற தோ், பிற்பகல் மீண்டும் நிலையை அடைந்தது.
பத்தாம் நாள் விழாவாக வெள்ளிக்கிழமை (பிப். 26) சங்கராபரணி ஆற்றங்கரையில் மாசி மக தீா்த்தவாரி நடைபெறுகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...