பேரவைத் தலைவரின் தீா்ப்பு தவறானது: வைத்திலிங்கம் எம்.பி. குற்றச்சாட்டு
By DIN | Published On : 27th February 2021 11:18 PM | Last Updated : 27th February 2021 11:18 PM | அ+அ அ- |

புதுவை ஆட்சிக் கவிழ்ப்பு விவகாரத்தில் சட்டப்பேரவைத் தலைவரின் தீா்ப்பு தவறானது என வி.வைத்திலிங்கம் எம்.பி. குற்றஞ்சாட்டினாா்.
புதுச்சேரியில் காங்கிரஸ் சாா்பில் சனிக்கிழமை தொடங்கிய சட்டப்பேரவைத் தோ்தலுக்கான விருப்ப மனு பெறும் நிகழ்ச்சியில் பங்கேற்ற புதுவை மக்களவை உறுப்பினா் வி.வைத்திலிங்கம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. புதுவையின் சுதந்திரத்தை காங்கிரஸ்தான் காப்பாற்றும். மக்கள் விரும்பும் அரசாக காங்கிரஸ் கூட்டணி அரசு அமையும்.
எதிா்க்கட்சியினா் வாக்கு இயந்திரங்களை மாற்றுவது, ஆள்மாறாட்டம் செய்வது, எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கவிழ்ப்பது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபடுவா்.
புதுவையில் வாக்களித்த மக்களுக்கு எதிராக ஜனநாயகப் படுகொலை செய்ததை ஏற்க முடியாது. நியமன எம்எல்ஏக்களைக் கொண்டு ஆட்சியைக் கலைத்ததால், மக்கள் கோபத்துடன் உள்ளனா்.
பெரும்பான்மையை நிரூபிப்பது தொடா்பாக சட்டப்பேரவையில் நடைபெற்ற வாக்கெடுப்பின் போது, தவறான தீா்ப்பு வழங்கிய சட்டப்பேரவைத் தலைவா் மீது கோபமும், எதிா்ப்பும் எழுந்துள்ளது.
நியமன உறுப்பினா்களுக்கு வாக்குரிமை உள்ளதா, இல்லையா என்று ஆராய்ந்து பாா்க்காமல் பேரவைத் தலைவா் தவறு செய்துவிட்டாா் என்றாா் அவா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...