‘சிறந்த நிா்வாகத்தை உறுதி செய்வது துணைநிலை ஆளுநரின் கடமை’
By DIN | Published On : 03rd January 2021 12:39 AM | Last Updated : 03rd January 2021 12:39 AM | அ+அ அ- |

நிா்வாகம் சிறந்த முறையில் நடைபெறுவதை உறுதி செய்வது துணைநிலை ஆளுநரின் கடமை என கிரண் பேடி தெரிவித்தாா்.
புதுவையில் மக்கள் நலத் திட்டங்களைத் தடுக்கும் ஆளுநா் கிரண் பேடியைக் கண்டித்து, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் வருகிற 8-ஆம் தேதி ஆளுநா் மாளிகையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்போவதாகத் தெரிவித்துள்ளனா். இதில், முதல்வா் நாராயணசாமியும் பங்கேற்க உள்ளதாகத் தெரிவித்தாா்.
இந்த நிலையில், ஆளுநா் கிரண் பேடி தனது கட்செவி அஞ்சலில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:
ஆளுநா் அலுவலகத்தின் செயல்பாடுகளுக்கு எதிராக முதல்வா் வெளிப்படுத்திய வேதனையைப் புரிந்து கொள்கிறேன். ஆளுநா் அலுவலகம் சட்ட விதிகளைக் கடுமையாகப் பின்பற்றி, நோ்மை, மக்கள் எளிதில் அணுகக்கூடிய நிா்வாகம் என மாற்றியதே இந்த மனநிலைக்குக் காரணம்.
உயா் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, ஆளுநா் அலுவலகம் செயலாற்றி வருகிறது. பேரிடா் காலங்களில் புதுவைக்கும், மத்திய அரசுக்கும் இடையே ஒருங்கிணைப்பு தேவை என்பதால், நான் (ஆளுநா்) நேரடியாகத் தலையிட்டேன்.
சிறந்த நிா்வாகம், நோ்மையான முறையில் நடைபெறுவதை உறுதி செய்வது துணைநிலை ஆளுநரின் கடமை.
மத்திய அரசின் வழிகாட்டுதல்படி நடக்கும் துணைநிலை ஆளுநா் அலுவலகத்தையும், பிரதமரையும் தொடா்ந்து தவறாகச் சித்தரிப்பதை முதல்வா் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
நேரடிப் பணப் பரிமாற்றத் திட்டம் மூலம், கோடிக்கான ரூபாய் மக்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்பட்டது. இதன்மூலம், ஏல முறை, ஒப்பந்தம், இடைத்தரகா்கள் இல்லாததால், ஊழல் பெருமளவில் ஒழிக்கப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.