பள்ளிகளைத் திறக்க அனுமதிக்கக் கூடாது: மத்திய அமைச்சரிடம் புதுவை அதிமுக மனு
By DIN | Published On : 03rd January 2021 11:16 PM | Last Updated : 03rd January 2021 11:16 PM | அ+அ அ- |

புதுச்சேரியில் பள்ளிகளைத் திறக்க அனுமதிக்கக் கூடாது என மத்திய இணையமைச்சரிடம் புதுவை அதிமுக வலியுறுத்தியது.
இதுகுறித்து மத்திய இணையமைச்சா் கிஷன் ரெட்டியை, புதுவை சட்டப்பேரவை அதிமுக கொறடா வையாபுரி மணிகண்டன் எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை சந்தித்து அளித்த மனு: அவசர கதியில் பள்ளிகளைத் திறக்க புதுவை அரசு உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் உடல் வெப்பப் பரிசோதனை, கிருமி நாசினி தெளித்தல், வகுப்பறைகளைச் சுத்தம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள போதிய ஊழியா்கள் இல்லை. தனியாா் பள்ளிகள் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் பள்ளிகளைத் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், நிகழ் கல்வியாண்டுக்கான பாடங்கள் குறித்து வரைமுறைப்படுத்தவில்லை. இதனால், பெற்றோா்-மாணவா்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனா்.
புதுச்சேரியில் பள்ளிகளைத் திறப்பது குறித்து மத்திய சுகாதாரத் துறை ஆய்வுக் குழுவினா் ஆய்வு செய்து, இறுதி முடிவெடுக்கும் வரை பள்ளிகளைத் திறக்க அனுமதிக்கக் கூடாது. பள்ளிகளைத் திறக்கும் அரசின் முடிவுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.