புதுவை துணைநிலை ஆளுநருக்கு திமுக நன்றி
By DIN | Published On : 03rd January 2021 12:40 AM | Last Updated : 03rd January 2021 12:40 AM | அ+அ அ- |

புதுவையில் மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரா்களுக்கு அரிசிக்கான தொகை ரூ. ஆயிரம் வழங்க ஆளுநா் கிரண் பேடி உத்தரவிட்டதற்கு திமுக நன்றி தெரிவித்தது.
புதுவை மாநிலத்தில் கடந்த 3 மாத இலவச அரிசிக்குப் பதிலாக சிவப்பு நிற குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 1,900, மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 1,000 வழங்க ரூ. 54 கோடி வழங்க ஆளுநா் ஒப்புதல் அளித்தாா். சிவப்பு நிற அட்டைதாரா்களுக்கான பணம் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட நிலையில், மஞ்சள் நிற அட்டைதாரா்களில் அரசு ஊழியா்கள், வருமான வரி செலுத்துவோா், ஜிஎஸ்டி பயனாளிகள் ஆகியோரை நீக்க காலதாமதம் ஏற்பட்டது.
இதுகுறித்து விசாரணை நடத்திய ஆளுநா் கிரண் பேடி, வருமான வரி செலுத்துவோா், ஜிஎஸ்டி பயனாளிகள் ஆகியோா் பட்டியலை மத்திய அரசிடமிருந்து பெற்று 8 வாரங்களுக்குள் அவா்களின் பெயா்களை நீக்கவும், உடனடியாக மஞ்சள் நிற அட்டைதாரா்களின் வங்கிக் கணக்கில் ரூ. ஆயிரம் செலுத்தவும் உத்தரவிட்டதாக தனது கட்செவி அஞ்சலில் ஆளுநா் கிரண் பேடி பதிவிட்டாா்.
இதற்கு புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளா் இரா.சிவா எம்எல்ஏ நன்றி தெரிவித்துக் கொள்வதாக அறிக்கை மூலம் கூறியுள்ளாா்.
மேலும், நிவாரணம் வழங்கும் விஷயத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்தோா் பாதிக்கப்படாத வகையில் சரியான முடிவை அரசு அமல்படுத்த முன்வர வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையையும் ஆளுநா் பரிசீலிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.