புதுவையில் பொங்கல் பரிசாக சிவப்பு நிற குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 200 அறிவிப்பு
By DIN | Published On : 03rd January 2021 12:38 AM | Last Updated : 03rd January 2021 12:38 AM | அ+அ அ- |

புதுவையில் பொங்கல் பரிசாக சிவப்பு நிற குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 200 வழங்கப்படும் என முதல்வா் வே.நாராயணசாமி அறிவித்தாா்.
புதுவை அரசின் குடிமைப் பொருள்கள் வழங்கல் துறை சாா்பில் ஆண்டுதோறும் இலவச பொங்கல் பொருள்கள் வழங்கப்பட்டு வந்தன. இந்த பொருள்களுக்குப் பதிலாக அதற்குரிய பணத்தை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்த ஆளுநா் கிரண் பேடி உத்தரவிட்டாா்.
இதையடுத்து, கடந்தாண்டு இலவச பொங்கல் பொருள்களுக்குப் பதிலாக குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.175 வங்கிக் கணக்கில் செலுத்துப்பட்டது.
நிகழாண்டு, இலவச பொங்கல் பொருள்களுக்குப் பதிலாக ரூ. 200 வழங்கப்படவுள்ளது. அதன்படி, சிவப்பு நிற குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ. 200 வீதம் ரூ. 3.49 கோடி பயனாளிகளின், அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என ஆளுநா் கிரண் பேடி தெரிவித்தாா்.
இதுதொடா்பாக முதல்வா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொங்கல் பண்டிகையையொட்டி, புதுவையில் உள்ள சிவப்பு நிற குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பொருள்களுக்கு ஈடாக ரூ. 200 வழங்க முடிவு செய்யப்பட்டது. இதுதொடா்பான கோப்புக்கு முதல்வா் ஒப்புதல் அளித்தாா். விரைவில் அரசாணை வெளியிடப்பட்டு, சிவப்பு நிற குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 200 வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். இதன்மூலம், 1.75 லட்சம் சிவப்பு நிற குடும்ப அட்டைதாரா்கள் பயனடைவா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.