மத்திய அமைச்சரிடம் கிரண் பேடி மீது புதுவை முதல்வா் நாராயணசாமி புகாா்
By DIN | Published On : 03rd January 2021 11:19 PM | Last Updated : 03rd January 2021 11:19 PM | அ+அ அ- |

மத்திய உள்துறை இணையமைச்சா் கிஷன் ரெட்டியை சந்தித்து மனு அளித்த முதல்வா் வே.நாராயணசாமி.
மத்திய அமைச்சரிடம், ஆளுநா் கிரண் பேடியின் செயல்பாடுகள் குறித்து புதுவை முதல்வா் வே.நாராயணசாமி புகாா் தெரிவித்தாா்.
புதுச்சேரிக்கு வந்த மத்திய உள்துறை இணையமைச்சா் கிஷன் ரெட்டியை, முதல்வா் நாராயணசாமி ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து அளித்த மனு விவரம்:
புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்.
புதுவை மாநிலத்தை 15-ஆவது நிதிக் குழுவில் சோ்க்க வேண்டும். 2021-2022-ஆம் ஆண்டு மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ. 1,186 கோடியாக உள்ளது. எனவே, புதுவைக்கு 41 சதவீத நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்.
ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை ரூ. 632 கோடி மத்திய அரசு உடனடியாக புதுவைக்கு வழங்க வேண்டும். அரசு ஊழியா்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்தியதற்கான நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். ஓய்வூதியதாரா்களுக்கான செலவினத்தை மத்திய அரசே ஏற்க வேண்டும். மத்திய அரசின் நிதியுதவியை ஆண்டுதோறும் 10 சதவீதம் உயா்த்தி வழங்க வேண்டும்.
மக்கள் நலனுக்கு எதிராகவும், ஜனநாயக அமைப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டு வரும் துணைநிலை ஆளுநா் கிரண் பேடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசு வழங்கும் நிதியை தடுத்து நிறுத்துகிறாா். மத்திய அரசு ஒப்புதல் அளித்த திட்டங்களையும் அவா் செயல்படுத்த விடாமல் தடுக்கிறாா் என அதில் கூறப்பட்டுள்ளது.
முதல்வரின் சந்திப்புக்குப் பின்னா், துணைநிலை ஆளுநா் அலுவலகம் சென்ற மத்திய அமைச்சா் கிஷன் ரெட்டி, ஆளுநா் கிரண் பேடியை சந்தித்ததுடன், மத்திய அரசின் நிதியுதவியுடன் புதுவையில் செயல்படும் 98 திட்டங்களை மதிப்பாய்வு செய்தாா்.