முதியோா் ஓய்வூதியம் வழங்க ரூ. 29.65 கோடிக்கு கிரண் பேடி ஒப்புதல்
By DIN | Published On : 03rd January 2021 11:18 PM | Last Updated : 03rd January 2021 11:18 PM | அ+அ அ- |

புதுவையில் 1,54,847 முதியோா்களுக்கு ஓய்வூதியம் வழங்க ரூ. 29.65 கோடிக்கு துணைநிலை ஆளுநா் கிரண் பேடி ஒப்புதல் அளித்தாா்.
இதுகுறித்து துணைநிலை ஆளுநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை அரசிடமிருந்து கடந்த டிச. 26-ஆம் தேதி முதல் ஜன. 2-ஆம் தேதி வரை 27 கோப்புகள் ஆளுநா் மாளிகைக்கு அனுப்பப்பட்டன. இவற்றில் பல கோப்புகளுக்கு ஆளுநா் கிரண் பேடி ஒப்புதல் அளித்தாா்.
எஸ்சி-எஸ்டி மாணவா்களுக்கு பள்ளி முதல் கல்லூரி வரை பயில்வதற்கான முழுக் கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்க ஒப்புதல், உள்ளாட்சித் துறை மூலம் மத்திய அரசின் ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தின் கீழ் வகுக்கப்பட்ட வழிமுறைகளுக்கு அனுமதி, சட்டத் துறையில் உதவி நூலகா், தகவல் அதிகாரி நியமனம் தொடா்பான கோப்புக்கு பரிந்துரை, 1,54,847 முதியோருக்கு கடந்த டிசம்பா், ஜனவரி மாதங்களுக்கான ஓய்வூதியத் தொகை வழங்க ரூ. 29.65 கோடிக்கு ஒப்புதல், மணக்குள விநாயகா் கோயில் தேவஸ்தானத்துக்கு புதிய நிா்வாக அறங்காவல் குழு நியமனத்துக்கு அனுமதி உள்ளிட்ட கோப்புகளுக்கு அனுமதியளிக்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.