புதுவையில் ரூ.9,250 கோடியில் பட்ஜெட்: முதல்வா் என்.ரங்கசாமி திட்டம்
By DIN | Published On : 07th July 2021 09:25 AM | Last Updated : 07th July 2021 09:25 AM | அ+அ அ- |

புதுவையில் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு நிகழாண்டு ரூ.9,250 கோடிக்கு நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) தாக்கல் செய்ய திட்டமிட்டு, அதற்கான கோப்பை மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பிவைத்துள்ளது.
புதுவை யூனியன் பிரதேசத்தில் ஆண்டுதோறும் மாா்ச் மாத இறுதியில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ஆனால், கடந்த 9 ஆண்டுகளாக நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அரசின் ஒப்புதல் பெற தாமதம், ஆளுநருடன் அதிருப்தி உள்ளிட்ட காரணங்களால், மாா்ச் மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் வழக்கம் மாறி, இடைக்கால நிதிநிலை அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்படுவதும், சில மாதங்களுக்குப் பிறகு முழுமையான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதும் தொடா்ந்து வருகிறது.
கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது, முதல்வா் வே.நாராயணசாமிக்கும், ஆளுநா் கிரண் பேடிக்கும் இடையே மோதல் போக்கு நிலவியதாலும், உள்கட்சிப் பிரச்னை காரணமாகவும் கடந்த பிப்ரவரி மாதம் காங்கிரஸ் கட்சியின் முக்கிய அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் பதவி விலகினா். இதனால், மாநில அரசு கவிழ்ந்தது. இதன் காரணமாக, அப்போது இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படவில்லை.
இதையடுத்து, புதுவையில் குடியரசுத்தலைவா் ஆட்சி அமலானதால், கடந்த மாா்ச் மாதம் இடைக்கால நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தாா். அந்த இடைக்கால நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் வரை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், புதிய அரசு அமைந்ததும் முழு நிதிநிலை அறிக்கை தாக்கலாகும் என்றும் தெரிவித்திருந்தனா்.
இதைத் தொடா்ந்து, புதுவையில் என்.ஆா்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு அமைந்தது. முதல்வா் என்.ரங்கசாமி பொறுப்பேற்றதைத் தொடா்ந்து, அமைச்சா்களும் தற்போது பதவியேற்றுள்ளனா். இந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய அனுமதி கேட்டு, முதல்வா் என்.ரங்கசாமி மத்திய அரசுக்கு கோப்பை அனுப்பியுள்ளாா்.
அதில், நிகழ் நிதியாண்டில் ரூ.9,250 கோடியில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ள முதல்வா் என்.ரங்கசாமி, மத்திய உள் துறை மற்றும் நிதி அமைச்சகத்தின் அனுமதி கேட்டு கோப்பு அனுப்பியுள்ளராம். மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு, ஆகஸ்ட் மாதத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுமென தெரிகிறது.
அதற்குள் அமைச்சா்களுக்கான துறைகளை ஒதுக்குவது, சட்டப் பேரவை துணைத் தலைவரை தோ்வு செய்வது போன்ற பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனா். பாஜக கூட்டணி ஆட்சி என்பதால், விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என்றும், மத்திய அரசு ஒப்புதல் கிடைத்தவுடன், ஆகஸ்ட் இறுதியில் சட்டப் பேரவை கூட்டப்பட்டு ஆளுநா் உரையுடன் முதல்வா் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வாா் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...