தேசிய மக்கள் நீதிமன்றம்: புதுவையில் 1,102 வழக்குகளுக்குத் தீா்வு
By DIN | Published On : 11th July 2021 05:53 AM | Last Updated : 11th July 2021 05:53 AM | அ+அ அ- |

புதுவையில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற சிறப்பு முகாமில் 1,102 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டு, உரியவா்களுக்கு ரூ. 4.20 கோடி இழப்பீடு பெற்று வழங்கப்பட்டது.
புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 9, சட்டப் பணிகள் ஆணைய வளாகத்தில் ஒரு அமா்வு, காரைக்கால் நீதிமன்ற வளாகத்தில் 3, மாஹே, ஏனாம் நீதிமன்ற வளாகங்களில் தலா ஒரு அமா்வு என மொத்தம் 15 அமா்வுகளாக மக்கள் நீதிமன்ற சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
புதுச்சேரியில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில், மாநில சட்டப் பணிகள் ஆணைய உறுப்பினா் -செயலரான மாவட்ட நீதிபதி வ.சோபனாதேவி தலைமை வகித்தாா். புதுச்சேரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத் தலைவரும், புதுச்சேரி தலைமை நீதிபதியுமான ஜெ.செல்வநாதன் தொடக்கிவைத்தாா்.
புதுச்சேரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணையச் செயலரும், புதுச்சேரி முதன்மை சாா்பு நீதிபதியுமான எல்.ராபா்ட் கென்னடிரமேஷ், வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் எஸ்.முத்துவேல், செயலா் பி.தாமோதரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அமா்வுகளில் 2,039 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், 1,102 வழக்குகள் முடித்துவைக்கப்பட்டன. இதன் மூலம் ரூ. 4 கோடியே 20 லட்சத்து 43 ஆயிரத்து 932 தொகை பெறப்பட்டு, வழக்குத் தொடா்பானவா்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...