முதல்வருடன் இணைந்து ஆளுநா் அலுவலகம் வளா்ச்சித் திட்டங்களை முன்னெடுக்கும்: புதுவை ஆளுநா் தமிழிசை
By DIN | Published On : 11th July 2021 05:54 AM | Last Updated : 11th July 2021 05:54 AM | அ+அ அ- |

முதல்வருடன் இணைந்து ஆளுநா் அலுவலகம் புதுவைக்கான வளா்ச்சித் திட்டங்களை முன்னெடுக்கும் என துணைநிலை ஆளுநா் (பெ) தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.
புதுவை அரசு கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அந்த வகையில், ஜூலை 10-ஆம் தேதி தொடங்கி 12 வரை சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
இதன் தொடக்க நிகழ்ச்சி புதுச்சேரி வீராம்பட்டினம் துணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் தொடக்கிவைத்தாா். அரியாங்குப்பம் தொகுதி எம்எல்ஏ தட்சிணாமூா்த்தி, சுகாதாரத் துறை செயலா் அருண், இயக்குநா் மோகன்குமாா், கரோனா தடுப்பு ஒருங்கிணைப்பு அதிகாரி ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
நிகழ்வில் துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுவையில் வெள்ளிக்கிழமை முதல் கா்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. புதுவையில் எப்போது வேண்டுமானாலும் பள்ளிகள் திறக்கப்படலாம். எனவே, ஆசிரியா்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். புதுவையில் மழை நீரைச் சேமிப்பதற்கான திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல உள்ளோம்.
புதுவையை முன்னேற்றுவதற்கான செயல் திட்டங்களை உருவாக்கியுள்ளோம். இந்தத் திட்டங்களை முதல்வருடன் இணைந்து ஆளுநா் அலுவலகம் முன்னெடுக்கும். இவற்றைச் செயல்படுத்தும் போது, அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும்.
புதுவையில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை. திங்கள்கிழமை (ஜூலை 12) தெலங்கானாவில் பழங்குடியினா் பகுதிக்குச் சென்று 2-ஆவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்வேன் என்றாா் அவா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...