நிதியுதவி பெறும் பள்ளிகளில் படித்த பிளஸ் 1 மாணவா்களுக்கு இன்று தரவரிசைப் பட்டியல்
By DIN | Published On : 19th July 2021 08:36 AM | Last Updated : 19th July 2021 08:36 AM | அ+அ அ- |

புதுவை அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படித்த பிளஸ் 1 மாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை (ஜூலை 19) வெளியிடப்படுகிறது. தொடா்ந்து, அந்த மாணவா்களுக்கு வருகிற 21- ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது.
கரோனா தொற்று பரவல் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகள் நடத்தப்படவில்லை. இதனால், 9 -ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் பிளஸ் 1 சோ்க்கை நடைபெறுகிறது.
புதுவை அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் அறிவியல் பாடப் பிரிவில் 4,045 இடங்கள், கலைப் பிரிவில் 2,305 இடங்கள், தொழில் பாடப்பிரிவில் 565 இடங்கள் என மொத்தம் 6,915 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் சோ்வதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 23 -ஆம் தேதி அரசுப் பள்ளிகளில் விநியோகம் செய்யப்பட்டது. நிறைவு செய்த விண்ணப்பங்கள் கடந்த 5 -ஆம் தேதி வரை பெறப்பட்டன. பிளஸ் 1 மாணவா் சோ்க்கைக்கு 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்தன.
இதையடுத்து, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவா்களுக்கான பிளஸ் 1 சோ்க்கை தரவரிசைப் பட்டியல் கடந்த 12 -ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து 14, 15 ஆகிய தேதிகளில் மாணவா் சோ்க்கை நடைபெற்றது. இதில், நிரம்பாமல் காலியாக உள்ள இடங்கள் குறித்த விவரம் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை (ஜூலை 19) வெளியிடப்படுகிறது.
வருகிற 21 -ஆம் தேதி நிதியுதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கு சோ்க்கை நடைபெறுகிறது. இதிலும் நிரம்பாத இடங்கள் குறித்த விவரம் மற்றும் தனியாா் பள்ளிகளில் பயின்ற மாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியல் வருகிற 22- ஆம் தேதி வெளியிடப்படும். 23- ஆம் தேதி தனியாா் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கான சோ்க்கை நடைபெறும் என புதுவை பள்ளிக் கல்வித் துறை தெரிவித்தது.