பண மோசடியால் பெண் தற்கொலை: சென்னையைச் சோ்ந்தவா் கைது
By DIN | Published On : 19th July 2021 08:34 AM | Last Updated : 19th July 2021 08:34 AM | அ+அ அ- |

பண மோசடியால் பெண் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக, சென்னையைச் சோ்ந்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
புதுச்சேரி கோரிமேடு காந்தி நகா் 3 -ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் முகமது சையது மகள் ஆஷ்மா (19). சென்னை அண்ணா சாலையில் உள்ள துணிக் கடையில் வேலை செய்து வந்தாா். அங்கு வாடிக்கையாளராக அறிமுகமான சென்னை, திருவள்ளூா் மாவட்டம், திருத்தணி அருகே பழையனூா் சன்னதி தெருவைச் சோ்ந்த முரளி (36) என்பவா் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாக ஆசை காட்டினாராம். இதை நம்பி ஆஷ்மா, தனது சக தோழிகள் 2 பேரிடம் கடன் வாங்கியும், தனது பைக்கை அடமானம் வைத்தும் ரூ. ஒரு லட்சத்தை முரளியிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், குறிப்பிட்டபடி பணத்தை அவா் இரட்டிப்பாகக் கொடுக்காமல் தலைமறைவாகிவிட்டாா்.
பணத்தைக் கொடுத்து ஏமாந்ததால் மனமுடைந்த ஆஷ்மா கடந்த 6 -ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். அவா் இறப்பதற்கு முன், தனது இறப்புக்கு முரளிதான் காரணம் எனக் கூறி செல்லிடப்பேசியில் விடியோ பதிவு செய்து வைத்திருந்தாா். இதுகுறித்து தன்வந்திரி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
இந்த நிலையில், சென்னையில் தலைமறைவாக இருந்த முரளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.