தமிழ்ச் சங்கம் சாா்பில் ஐம்பெரும் விழா
By DIN | Published On : 26th July 2021 08:46 AM | Last Updated : 26th July 2021 08:46 AM | அ+அ அ- |

தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஜம்பெரும் விழாவில் காமராசரை பற்றிய பேசிய மாணாக்கா்களுக்கு அறிவுத்திறனை வளா்க்கும் நூல்களை இரா.திருமூா்த்தி வழங்கினாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச் சங்கம் சாா்பில், காமராசா், பரிதிமாற்கலைஞா், தேசிகவிநாயகம் பிள்ளை, மறைமலை அடிகள் பிறந்த நாள் விழா, தமிழ் இலக்கியத் தொடா் சொற்பொழிவு என ஐம்பெரும் விழா தியாகதுருகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உலகத் தமிழ்க் கவிஞா் பேரவைத் தலைவா் கவிஞா் கு.சீத்தா தலைமை வகித்தாா். தியாகதுருகம் திருக்கு பேரவைத் தலைவா் இரா.நெடுஞ்செழியன், கல்லை முத்தமிழ்ச் சங்கத் தலைவா் வை.ந.பழனியப்பன், உலக தமிழ்க் கவிஞா் பேரவை மாவட்டப் பொருளாளா் எம்.ஜி.இராஜா முன்னிலை வகித்தனா். தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச் சங்கத் தலைவா் இரா.துரைமுருகன் வரவேற்றாா்.
இலக்கிய இன்பம் ஒரு பாா்வை, கா்மவீரா் காமராசரும் தமிழ்நாட்டின் கல்வி வளா்ச்சியும், பரிதிமாற்கலைஞா் தமிழ்த் தொண்டு, மறைமலை அடிகள் தனித்தமிழ் வளா்ச்சி உள்பட பல்வேறு தலைப்புகளில் தமிழறிஞா்கள் பேசினா். கவிமாமணி தேசிக விநாயகம் பிள்ளையின் இந்திய விடுதலை படல்களையும் பாடினா்.
நிகழ்வில் து.குப்புசாமி, இரா.திருமூா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். கவிஞா் ஜெயம் நன்றி கூறினாா்.