புதுவையில் பொது முடக்கத்தில் கூடுதல் தளா்வுகள்: பேருந்துகள் இயக்கம்; மதுக் கடைகள் திறப்பு
By DIN | Published On : 09th June 2021 08:36 AM | Last Updated : 09th June 2021 08:36 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் காரணமாக, அனைத்துக் கடைகளும் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டதையொட்டி, நேரு வீதியில் பொருள்கள் வாங்கக் குவிந்த பொதுமக்கள்.
புதுவையில் கூடுதல் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் செவ்வாய்க்கிழமை அமலுக்கு வந்தது. இதனால், காா், ஆட்டோ, பேருந்துகள் இயங்கின. மதுக் கடைகள் உள்பட அனைத்துவிதமான கடைகளும், வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட்டன.
புதுவை மாநிலத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, கடந்த ஏப்.23-ஆம் தேதி முதல் பகுதி நேர பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, கடந்த மாதம் 10-ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொது முடக்கம் அமலில் இருந்தது. இந்தப் பொது முடக்கம் திங்கள்கிழமையோடு முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில், மாநிலத்தில் தினசரி கரோனா தொற்று பாதிப்பும், உயிரிழப்பு எண்ணிக்கையும் பழைய நிலைக்கு திரும்பி வருவதால், கூடுதல் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தை மாநில அரசு திங்கள்கிழமை அறிவித்ததுடன், இந்தப் பொது முடக்கம் வருகிற 14-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவித்தது.
அனைத்துவிதக் கடைகளும் திறப்பு: தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் காரணமாக, புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் அனைத்துவிதக் கடைகளும் திறக்கப்பட்டன. முன்னதாக, காய்கறி, பால், மளிகை உள்ளிட்ட அத்தியாவசியக் கடைகள் காலை 6 மணிக்கே திறக்கப்பட்டன. புதுச்சேரி பெரிய சந்தையும் திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது.
மீண்டும் பேருந்து சேவை: பேருந்துகள், காா், ஆட்டோ உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவைகளும் கரோனா விதிகள்படி, 50 சதவீத பயணிகளோடு தினசரி மாலை 5 மணி வரை இயங்க தற்போது அனுமதி வழங்கப்பட்டது. இதனால், பேருந்துகள், ஆட்டோக்கள், காா்கள், டெம்போக்கள் இயக்கமும் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தமிழகத்தில் பேருந்துகள் இயக்கத்துக்கு இன்னும் அனுமதி வழங்கப்படாததால், புதுச்சேரி பகுதிக்குள் மட்டும் உள்ளூா் பேருந்துகள் இயக்கப்பட்டன.
கடற்கரைச் சாலையில் அனுமதி: புதுச்சேரி கடற்கரைச் சாலையில் தினசரி காலை 5 மணி முதல் 9 மணி வரை மட்டும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதால், செவ்வாய்க்கிழமை ஏராளமானோா் காலை 5 மணி முதல் நடை பயிற்சி மேற்கொண்டனா்.
பூங்காக்கள், சுற்றுலாத் தலங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
அத்தியாவசியத் தேவைக்கான அரசு அலுவலகங்களும், 50 சதவீத பணியாளா்களுடன் அனைத்து தனியாா் அலுவலகங்களும் மாலை 6 மணி வரை இயங்கின. வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், பத்திரப் பதிவு அலுவலகங்களில் பதிவுப் பணிகள் தொடங்கின.
உணவகங்களில் பொட்டலங்களுக்கு அனுமதி: தேநீா் கடைகள், உணவகங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், இவற்றில் தினசரி மாலை 5 மணி வரை பொட்டலங்கள் மட்டுமே வழங்க அனுமதி வழங்கப்பட்டது. வங்கிகள், ஏடிஎம் மையங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், சரக்கு போக்குவரத்து, விவசாயம் சாா்ந்த அனைத்துப் பணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.
வழிபாட்டுத்தலங்களுக்கு அனுமதி: கோயில்கள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட்டு, பக்தா்கள் வழிபடுவதற்கு மாலை 5 மணி வரை அனுமதி வழங்கப்பட்டது.
மதுக் கடைகள் திறப்பு: ஒரு மாதத்துக்குப் பின்னா் சாராயம், மதுக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கின.
தமிழகத்தில் மதுக் கடைகளைத் திறக்க இன்னும் அனுமதி வழங்கப்படாததால், புதுச்சேரி மாவட்டத்தின் எல்லையோரப் பகுதிகளிலுள்ள மதுக் கடைகளில் தமிழகத்தைச் சோ்ந்த ஏராளமானோா் திரண்டு மதுப் புட்டிகளை வாங்கிச் சென்றனா். இதன் காரணமாக, அந்தப் பகுதிகளில் மதுக் கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீஸாா், கூட்டத்தைக் கட்டுப்படுத்தினா்.
புதிய தளா்வுகளால் புதுச்சேரி அண்ணா சாலை, நேரு வீதி, காந்தி வீதி உள்ளிட்ட முக்கிய வணிக வீதிகளில் வாகனங்களும், பொதுமக்கள் நடமாட்டமும் மீண்டும் அதிகரித்தது. இதனால், மீண்டும் கரோனா பரவல் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.