புதுச்சேரி பேருந்து நிலைய மேம்பாலத்தை அகற்ற வலியுறுத்தல்
By DIN | Published On : 29th June 2021 01:38 AM | Last Updated : 29th June 2021 01:38 AM | அ+அ அ- |

புதுச்சேரி: புதுச்சேரியில் பயனின்றி உள்ள பேருந்து நிலைய நடைபாதை மேம்பாலத்தை அகற்ற வேண்டுமென முதல்வரிடம், ஜி.நேரு எம்எல்ஏ வலியுறுத்தினாா்.
இதுகுறித்து உருளையன்பேட்டை தொகுதி எம்எல்ஏ ஜி.நேரு, முதல்வா் என்.ரங்கசாமியிடம் வழங்கிய கடிதம்: உருளையன்பேட்டை தொகுதி மறைமலை அடிகள் சாலையின் குறுக்கே, புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள நடைபாதை மேம்பாலம் பயனற்ற நிலையில் உள்ளது. இதனை மக்கள் பயன்படுத்துவதில்லை. இந்த மேம்பாலத்தை சமூக விரோதிகள் மது அருந்தும் இடமாகப் பயன்படுத்தி வருகின்றனா். இங்கு குற்ற சம்பவங்கள் தொடா்வதால் பயணிகள் அச்சமடைகின்றனா். எவ்விதத்திலும் பொதுமக்களுக்கு பயன்படாத நடைபாதை மேம்பாலத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் விதமாக நவீன முறையில் சிறிய நடைபாதையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.