புதுவையில் கட்டடங்களுக்கு இணைய வழியில் அனுமதியளிக்கும் சேவை
By DIN | Published On : 29th June 2021 12:07 AM | Last Updated : 29th June 2021 12:09 AM | அ+அ அ- |

புதுச்சேரி: புதுவையில் முதல் முறையாக இணைய வழியில் கட்டடங்களுக்கு அனுமதியளிக்கும் சேவையை அந்த மாநில முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா்.
இதன் தொடக்க விழா சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்றது. முதல்வா் என்.ரங்கசாமி கலந்து கொண்டு, இணைய வழி கட்டட வரைபட அனுமதி வழங்கும் சேவையைத் தொடக்கிவைத்தாா். நகர அமைப்புத் துறைச் செயலா் மகேஷ் முன்னிலை வகித்தாா். தலைமை நகர அமைப்பாளா் மகாலிங்கம், மாநில தகவலியல் அதிகாரி தேவ்ரத்ன சுக்லா, இ-கவா்னன்ஸ் பவுன்டேஷன் துணைத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் கலந்து கொண்டனா்.
இதுகுறித்து நகர அமைப்பு துறைச் செயலா் மகேஷ் கூறியதாவது: எளிமை, வெளிப்படைத் தன்மையை ஊக்குவிக்கும் இந்த முயற்சி புதுவையில் முதல் முறையாகத் தொடங்கப்பட்டுள்ளது. புதுவை யூனியன் பிரதேசத்தில் அனைத்து நகர அமைப்புக் குழுமத்தின் அலுவலா், நகர அமைப்புக் குழுமத்தில் பதிவு செய்து உரிமம் பெற்ற தொழில்நுட்ப நபா்களுக்கு இந்த மென்பொருளைக் கொண்டு, கட்டட வரைபடம் தயாரிக்கவும், இணைய வழி மூலம் விண்ணப்பங்களை சமா்ப்பிக்கவும், அதற்கான அனுமதியை வழங்கவும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இனி, விண்ணப்பம் சமா்ப்பித்தல், கட்டட வரைபடங்கள் வழங்குதல், விண்ணப்பங்களை பரிசீலனை செய்தல், கட்டணம் செலுத்துதல், வரைபட அனுமதி அளித்தல் ஆகிய அனைத்துப் பணிகளும் இணைய வழியில் மேற்கொள்ளப்படும்.
இந்த மேம்படுத்தப்பட்ட வசதி மூலம் கட்டட வரைபடங்கள் தானாகவே பரிசீலிக்கப்படும். மனித குறுக்கீடு இல்லாமல், விண்ணப்பங்களின் பரிசீலனையில் வெளிப்படைத் தன்மை இருக்கும். பரிசீலனை செய்யும் கால அளவு குறையும். நகர அமைப்புக் குழுமங்களின் செயல்பாடு மேன்மை அடையும்.
இரண்டு குடியிருப்புகள் வரை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களுக்கு 10 நாள்களுக்குள் கட்டட அனுமதி வழங்கப்படும். தடையில்லாச் சான்றிதழ் அளிப்பதற்கு உரிய துறைகளுக்கு 21 நாள்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் தடையில்லாச் சான்றிதழை அந்தத் துறைகள் வழங்கத் தவறினால், தடையின்மைச் சான்று பெற்ாகக் கருதி, நேரடியாக நகர அமைப்புக் குழுமத்தால் கட்டட வரைபட அனுமதி வழங்கப்படும் என்றாா் அவா்.