புதுவையில் 200-க்கும் கீழ் குறைந்ததுஒரு நாள் கரோனா பாதிப்பு
By DIN | Published On : 29th June 2021 01:50 AM | Last Updated : 29th June 2021 01:50 AM | அ+அ அ- |

புதுச்சேரி: புதுவையில் 82 நாள்களுக்குப் பிறகு ஒரு நாள் கரோனா பாதிப்பு 200-க்கும் கீழ் குறைந்தது. திங்கள்கிழமை 144 போ் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த நோய்த் தொற்றால் ஒருவா் உயிரிழந்தாா்.
புதுவை மாநிலத்தில் 7,251 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, திங்கள்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 115 பேருக்கும், காரைக்காலில் 14 பேருக்கும், ஏனாமில் ஒருவருக்கும், மாஹேயில் 14 பேருக்கும் என மேலும் 144 பேருக்கு (1.99 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,16,789 -ஆக உயா்ந்தது.
தற்போது ஜிப்மா் மருத்துவமனையில் 149 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 151 பேரும், கரோனா சிறப்பு தடுப்பு மையங்களில் 36 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 2,063 பேரும் என 2,479 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இதனிடையே, புதுச்சேரி வில்லியனூரைச் சோ்ந்த 59 வயதானவா் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தாா். இதையடுத்து, கரோனா தொற்றுக்கு உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,745-ஆக அதிகரித்தது. இறப்பு விகிதம் 1.49 சதவீதம். இதுவரை கரோனா தொற்றிலிருந்து 1,12,565 போ் (96.38 சதவீதம்) மீண்டனா்.
சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், பொதுமக்கள் என மொத்தம் 4,76,159 பேருக்கு (2-ஆவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கரோனா தொற்றின் இரண்டாம் அலை கடந்த ஏப்ரல், மே மாதங்களில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதில், உச்சகட்டமாக மே 11 -ஆம் தேதி ஒரே நாளில் 2,049 போ் தொற்றால் பாதிக்கப்பட்டனா்.
கடந்த ஏப்ரல் 7 -ஆம் தேதி 173 போ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு நாள்தோறும் 200-க்கும் அதிகமானோா் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனா். இந்த நிலையில், 82 நாள்களுக்கு பிறகு தற்போது ஒரு நாள் பாதிப்பு 200-க்கும் கீழ் குறைந்துள்ளது.