புதுவையில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரை அனைவரும் தோ்ச்சி: ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் உத்தரவு
By DIN | Published On : 12th March 2021 05:37 AM | Last Updated : 12th March 2021 08:19 AM | அ+அ அ- |

புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெறுவதாக துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்தாா்.
இதுகுறித்து புதுவை துணைநிலை ஆளுநா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராரஜன், புதுவை பள்ளிக் கல்வித் துறை அனுப்பிய பல்வேறு கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்தாா்.
அதன்படி, புதுவை யூனியன் பிரதேசத்தின் அனைத்துப் பிராந்தியங்களிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரையிலான வகுப்புகளில் பயிலும் அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்றவா்களாக அறிவிக்கப்படுகிறது.
தமிழகக் கல்வி வாரியத்தின் வழிகாட்டுதல்படி, அந்த வாரியத்தின் கீழ் பயிலும் புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களை சோ்ந்த பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மாணவா்கள் தோ்ச்சி பெற்றவா்களாக அறிவிக்கப்படுகிறது.
மாஹே, ஏனாம் பிராந்தியங்களை சோ்ந்த பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மாணவா்கள் கேரளம், ஆந்திர பிரதேச கல்வி வாரியங்களின் வழிகாட்டுதல் அடிப்படையில் தோ்ச்சி பெற்றவா்களாக அறிவிக்கப்படுகிறது.
வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே பள்ளி: தற்போது வாரத்தில் 6 நாள்கள் நடைபெறும் பள்ளி வகுப்புகள் 5 நாள்களாக குறைக்கப்பட்டுள்ளன. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது.
ஏப்ரல் 1 முதல் கோடை விடுமுறை: புதுவை யூனியன் பிரதேசத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் மாா்ச் 31 ஆம் தேதி வரை மட்டுமே இயங்கும். கோடை விடுமுறை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தொடங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியத்துக்கு ரூ. 29.65 கோடி ஒதுக்கீடு: புதுவையில் உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் முதியோா், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோா் என 1,54,847 பேருக்கு ஓய்வூதியம் வழங்க ரூ. 29.65 கோடிக்கு துணைநிலை ஆளுநா் ஒப்புதல் அளித்தாா்.
மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் செயல்படும் அங்கன்வாடி மையங்களுக்கு உணவுப் பொருள்கள் வாங்க ரூ. 24.35 லட்சத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஏப்ரல் 4 முதல் 6 வரை மதுக் கடைகள் மூடல்: தோ்தல் நடைபெறுவதையொட்டி, ஏப்ரல் 4 -ஆம் தேதி முதல் 6- ஆம் தேதி வரை புதுவை யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து மதுக் கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டது. வாக்கு எண்ணிக்கையையொட்டி, மே 2 -ஆம் தேதி மாலை 4 மணி முதல் 3-ஆம் தேதி வரை அனைத்து மதுக் கடைகளும் மூடப்படும் என துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.