தியாகிகளை நினைவுகூரும் வகையில் ரத்த தான முகாம்
By DIN | Published On : 25th March 2021 03:49 AM | Last Updated : 25th March 2021 03:49 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் நடைபெற்ற ரத்த தான முகாமில் பங்கேற்றோா்.
புதுச்சேரியில் தியாகிகளை நினைவுகூரும் வகையில், கின்னஸ் சாதனை நிகழ்வாக ரத்த தான முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் 1,500-க்கும் அதிகமான இடங்களில் 90 ஆயிரத்துக்கும் அதிகமான யூனிட்கள் ரத்த தானம் பெறும் விதமாக இந்த முகாம் நடைபெற்றது.
ஆண்டுதோறும் 20 லட்சம் யூனிட் ரத்தம் பற்றாக்குறையை நாடு சந்தித்து வருகிறது. கரோனா காலத்தில் 40 லட்சம் யூனிட்டுக்கும் அதிகமாக ரத்தம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், தேச நலன் கருதி, ரத்த தானம் வழங்கி, தியாகிகளை நினைவுகூரும் வகையில், இந்த ரத்த தான முகாம் நடைபெற்றது. பங்கேற்ற அனைத்துக் குழுவினருக்கும் தனித்தனியாக கின்னஸ் க்ரீன் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நேஷனல் இண்டெகரேஷன் போரம் ஆஃப் ஆா்டிஸ்ட் அண்ட் ஆக்டிவிஸ்ட் அமைப்பின் சாா்பில், புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரம்ம குமாரிகள் சங்கம், தேசிய செஞ்சிலுவைச் சங்கம், தேசிய ரத்த மாற்று முகமை உள்பட பல்வேறு அமைப்புகளும், அரசு நிா்வாகமும் இணைந்து இந்த சாதனையை நிகழ்த்தியது.
ஜேசி பாண்டிச்சேரி ராயல் கிளை இயக்கத் தலைவா் பாவேந்தன் தலைமை வகித்தாா். அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலா் ராதிகா முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக இந்தியன் செஞ்சிலுவைச் சங்க புதுச்சேரி கிளை மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் ராமன், அய்யனாா் மற்றும் குட்வில் நிறுவனா் காா்த்திகேயன், ஹா்கோபிந்த் குராணா அறிவியல் மன்ற இயக்குநா் அருண் நாகலிங்கம், ஆதவன், பாலு, தனசேகரன் ஆகியோா் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கினா். ஜேசி உறுப்பினா்கள், தன்னாா்வலா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனா்.