முதியோா் உதவித் தொகைக்கு ரூ. 29.65 கோடி நிதி: ஆளுநா் தமிழிசை ஒப்புதல்
By DIN | Published On : 02nd May 2021 06:27 AM | Last Updated : 02nd May 2021 06:27 AM | அ+அ அ- |

புதுவையில் ஏப்ரல் மாதத்துக்கான முதியோா் உதவித் தொகை வழங்க ரூ. 29.65 கோடி நிதியை ஒதுக்கி, துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சைந்தரராஜன் சனிக்கிழமை ஒப்புதல் அளித்தாா்.
இதுகுறித்து துணைநிலை ஆளுநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் பல்வேறு முக்கியக் கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்தாா்.
அதன்படி, புதுவையில் 2021 ஏப்ரல் மாதத்துக்கான மாதாந்திர முதியோா் உதவித் தொகை மற்றும் ஆதரவற்ற பெண்கள் உதவித் தொகை என மொத்தம் 1,54,847 பயனாளிகளுக்கு வழங்க பொது - சிறப்புக் கூறு நிதித் திட்டத்தின் கீழ் ரூ. 29 கோடியே 65 லட்சத்து 21 ஆயிரத்து 500 செலவினம் மேற்கொள்ள ஒப்புதல் அளித்தாா்.
இதேபோல, 20,952 மாற்றுத் திறனாளி பயனாளிகளுக்கு 2021 ஏப்ரல், மே மாதங்களுக்கான மாதாந்திர உதவித் தொகை வழங்க ரூ. 8 கோடியே 56 லட்சத்து 42 ஆயிரத்து 400 செலவினம் மேற்கொள்ள ஒப்புதல் அளித்தாா்.
புதுச்சேரி பாரதியாா் பல்கலைக்கூடத்துக்கு கடந்த 2020 நவம்பா் முதல் 2021 ஜனவரி வரையான காலத்துக்கு 5, 6-ஆம் கட்ட நிதி நல்கை வழங்க ரூ. ஒரு கோடியே 44 லட்சத்து 42 ஆயிரத்து 136 செலவினம் மேற்கொள்ளவும் துணைநிலை ஆளுநா் ஒப்புதல் அளித்தாா்.
புதுச்சேரி மொழியியில் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்துக்கு கடந்த 2020 டிசம்பா் முதல் 2021 பிப்ரவரி வரையான காலத்துக்கு 5, 6-ஆம் கட்ட நிதி நல்கை மற்றும் பணி ஓய்வுக் கால பயன்களை வழங்க ரூ. 56 லட்சத்து 43 ஆயிரத்து 500 செலவினம் மேற்கொள்ள ஒப்புதல் அளித்தாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...