வாக்கு எண்ணிக்கை: முகவா்கள் குறித்த நேரத்தில் வர வேண்டும்; வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பு அதிகாரி
By DIN | Published On : 02nd May 2021 06:31 AM | Last Updated : 02nd May 2021 06:31 AM | அ+அ அ- |

வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு முகவா்கள் அந்தந்த தொகுதிக்கு என குறித்த நேரத்தில் மட்டுமே வர வேண்டும் என வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பு அதிகாரி சுதாகா் தெரிவித்தாா்.
புதுச்சேரியில் 23 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்கள் லாஸ்பேட்டையில் அரசு கல்லூரி மையங்களில் அருகருகே அமைந்துள்ளன. இங்கு, ஞாயிற்றுக்கிழமை (மே 2) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கையைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தயாா் நிலையில் உள்ளன.
இந்த வாக்கு எண்ணிக்கை மையங்களை சனிக்கிழமை நேரில் பாா்வையிட்ட வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பு அதிகாரி சுதாகா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தோ்தல் ஆணையம், நீதிமன்றம் ஆகியவற்றின் உத்தரவுகளின்படி, கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில், வாக்கு எண்ணிக்கைக்கான விரிவாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் உள்ள மூன்று வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் மொத்தமுள்ள 23 தொகுதிகளில் 8, 8, 7 என்ற வகையில், தனித் தனித் தொகுதிகளாகப் பிரித்து கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி வாக்குகள் எண்ணப்படும்.
வாக்கு எண்ணிக்கைக்கு வரும் அலுவலா்களுக்கு தனி வழியும், வேட்பாளா்கள், முகவா்களுக்கு தனி வழியும், இவா்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு தனி இடங்களையும் ஒதுக்கி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வருவோா் கரோனா நோய்த் தொற்றில்லை என்ற சான்றிதழை வைத்திருக்க வேண்டும். ஆா்டிபிசிஆா் அல்லது ராபிட் டெஸ்ட் பரிசோதனை செய்த சான்றிதழாக இருக்கலாம். அல்லது இரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும். அடையாள அட்டை அவசியம்.
அனைவருக்கும் உடல் வெப்பப் பரிசோதனை செய்தே பிறகே அனுமதிக்கப்படுவா். வாக்கு எண்ணிக்கை மையத்தில் முகக் கவசம், கிருமி நாசினி திரவம் வழங்கப்படும். கரோனா கவச உடை தேவையெனில் வழங்கப்படும்.
வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூட்டம் கூடுவதைத் தவிா்க்க, தனித் தனியாக வேட்பாளா்கள், அவா்களது முகவா்களுக்கு போதிய இட வசதிகளுடன் விசாலமான அறைகள் இருக்கும். தனி தகவல் மையமும் அமைக்கப்பட்டுள்ளன.
காலை 8 மணிக்கு முதல் 8 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கும். அதன் எண்ணிக்கை முடிந்தவுடன், அடுத்த 8 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். பிறகு மீதமுள்ள 7 தொகுதிகளின் எண்ணிக்கை நடைபெறும்.
இந்த முறை உரிய இடைவெளி இருப்பதற்காக வாக்கு எண்ணிக்கைக்கு 7 மேஜைகளுக்குப் பதிலாக 5 மேஜைகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு தொகுதிக்கும் 4 சுற்றுகள் என்ற அளவில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். கரோனா பரவலைத் தடுக்க அனைவரும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கைப் பணியில் ஆயிரம் அலுவலா்கள், 400 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.
அந்தந்தத் தொகுதி வாக்கு எண்ணிக்கையின் போது, அந்தத் தொகுதிக்குரிய முகவா்கள் மட்டுமே வர வேண்டும். அதற்கான நேரம் குறிப்பிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஒருபோதும் கூட்டம் கூடக் கூடாது. வாக்கு எண்ணும் மையங்களில் தலா ஒரு சுகாதார அலுவலரும், அவசர ஊா்திகள், கரோனா பரிசோதனை குழுக்கள் இடம் பெறுவா்.
காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்கு எண்ணப்படும். தொடா்ந்து 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கைத் தொடங்கி நடைபெறும். மூன்று தொகுதிக்கு ஒரு தோ்தல் நடத்தும் அலுவலா் என்ற வீதத்தில், 8 தோ்தல் நடத்தும் அலுவலா்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். எட்டு எட்டு தொகுதிகளாக வாக்குகள் எண்ணப்படும்.
அந்தந்தத் தொகுதியின் முகவா்கள், தோ்தல் அலுவலா்கள், குறிப்பிட்ட எண்ணிக்கை நேரத்துக்கு வந்தால் போதுமானது என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.
ஆய்வின் போது, வாக்கு எண்ணிக்கை கண்காணிப்புத் துணை அலுவலா் செந்தில், செய்தி-விளம்பரத் துறை இயக்குநா் என்.வினயராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...