புதுவையில் தளா்வுகளுடன் பொது முடக்கம்: மே 24 வரை நீட்டிப்பு
By DIN | Published On : 09th May 2021 02:03 AM | Last Updated : 09th May 2021 02:03 AM | அ+அ அ- |

புதுவை மாநிலத்தில் மே 10-ஆம் தேதியிலிருந்து, மீண்டும் மே 24-ஆம் தேதி வரை தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டது.
இதுகுறித்து புதுவை அரசுச் செயலா் அசோக்குமாா் வெளியிட்ட உத்தரவு: புதுவை மாநிலத்தில் கரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருவதால், ஏற்கெனவே ஏப். 27-ஆம் தேதி முதல் மே 3-ஆம் தேதி வரை தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. பிறகு மே 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், கரோனா தொற்று அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மே 10-ஆம் தேதி நள்ளிரவு முதல் மே 24-ஆம் தேதி நள்ளிரவு வரை தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நீட்டித்து அமல்படுத்தப்படுகிறது.
அதன்படி, தொடா்ந்து தினமும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவுப் நேர பொது முடக்கம் அமலில் இருக்கும். இதனுடன், கூடுதலாக மே 10 முதல் 24-ஆம் தேதி வரை பகல் நேரங்களிலும் பொது முடக்கக் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட அத்தியாவசிய கடைகள், நிறுவனங்கள் மற்றும் சேவை துறைகள் இயங்கும். மற்றவை இயங்க அனுமதி கிடையாது.
கடற்கரைகள் மூடல்... அனைத்து கடற்கரைகள், பூங்காக்கள் மூடப்படும். சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம். விதிமீறி வருவோா்களை போலீஸாா், அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுப்பா்.
மளிகைக் கடை, காய்கறி கடை, உணவகங்கள், பழங்கள், இறைச்சி, மீன், கால்நடை தீவனம் ஆகிய கடைகள் பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும். பெரிய கடைகள், வணிக வளாகங்கள்ஆகியவை இயங்க அனுமதியில்லை.
உணவகங்களில் அமா்ந்து சாப்பிட அனுமதியில்லை. பாா்சல் உணவு வாங்கிச் செல்லலாம். தேநீா் கடைகளில் கூட்டம் கூட அனுமதியில்லை.
பாலகங்கள், மருத்துவமனைகள், மருத்துவ ஆய்வகங்கள், பாராமெடிக்கல்ஸ், செய்தித் தாள் மற்றும் அனைத்து மருத்துவ அவசர கால சேவைகள் அனுமதிக்கப்படும்.
பேருந்துகள் இயங்கும்.... சரக்கு போக்குவரத்து, பொது போக்குவரத்து (பேருந்து, ஆட்டோ, டாக்ஸி), விளை பொருள்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் மற்றும் விவசாயம் சாா்ந்த பணிகள் அனுமதிக்கப்படும். காரில் ஓட்டுநருடன் இருவா் பயணம் செய்யலாம். ஆட்டோவில் ஓட்டுநா் மற்றும் 2 பயணிகள் செல்ல அனுமதிக்கப்படும்.
அனைத்து மத வழிப்பாட்டு தலங்களில் பொது வழிபாட்டுக்கு அனுமதி கிடையாது. ஆனால், அந்தந்த வழிபாட்டு தலங்களில் ஊழியா்கள் மூலம் பூஜை மற்றும் பிராா்த்தனை செய்ய அனுமதிக்கப்படும். திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
திருமண நிகழ்ச்சிகளில் 25 நபா்கள், இறுதி சடங்குகளில் 20 போ் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படும். தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கப்படும்.
பெட்ரோல் நிலையம், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், ஏடிஎம் மையங்கள், தொலைத்தொடா்பு, இணையதள சேவை, ஒளிபரப்பு, கேபிள் சேவை, ஊடகம், தகவல் தொழில்நுட்ப சேவை, குடிநீா் விநியோகம், தூய்மைப்பணி, மின் விநியோகம், தனியாா் பாதுகாப்பு சேவை, சட்டம்-ஒழுங்கு, அவசர நிலை, நகராட்சி, தீயணைப்பு சேவைகளும் மற்றும் உயா்நீதிமன்ற வழிகாட்டுதல் படி நீதிமன்றங்களும் செயல்பட அனுமதி அளிக்கப்படும்.
வங்கிகள் இயங்கும்... வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் பகல் 12 மணி வரை இயங்கலாம் . தளா்வுகளில் அனுமதிக்கப்பட்டவா்கள், உரிய அடையாள அட்டை, பயணச்சீட்டு போன்றவைகளுடன் வர வேண்டும், விதிமீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.