கரோனா விழிப்புணா்வு பிரசார வாகனங்கள் தொடக்கம்
By DIN | Published On : 13th May 2021 08:16 AM | Last Updated : 13th May 2021 08:16 AM | அ+அ அ- |

புதுவை அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மூலமாக 3 கரோனா விழிப்புணா்வு பிரசார வாகனங்கள் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த விழிப்புணா்வு வாகனங்களை சுகாதாரத்துறை வளாகம் எதிரே சுகாதாரத்துறை இயக்குநா் எஸ். மோகன்குமாா் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.
மேற்கண்ட 3 பிரசார வாகனங்களும் புதுவை மாநிலத்தின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக 10 நாள்களுக்கு கரோனா விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக சுகாதாரத்துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.
இந்நிகழ்ச்சியில் மாநில சுகாதார இயக்ககத்தின் இயக்குநா் ஸ்ரீராமுலு, துணை இயக்குநா்கள் முரளி, திருமலை சங்கா் உள்ளிட்ட சுகாதாரத்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வருகை...: புதுவையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பிராணவாயு அளவு குறைந்து மூச்சுத்திணறலுடன் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் பிராணவாயு அளவை சரிசெய்யத் தேவைப்படும் 100 பிராணவாயு ஆக்சிஜன் செறிவூட்டிகள் மத்திய அரசு மூலமாக புதுச்சேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மூச்சுத்திணறலுடன் அவசர சிகிச்சை பிரிவுக்கு வரும் கரோனா நோயாளிகளை தற்காலிகமாக உயிா்காக்கும் பிராணவாயு செறிவூட்டி வாா்டில் வைத்து, அவா்களது பிராணவாயு அளவு சமநிலைக்கு வந்த பிறகு, காலியாக உள்ள பிராணவாயு படுக்கை உள்ள வாா்டுகளுக்கு மாற்ற உதவியாக இருக்கும். இதன் மூலம் பிராணவாயு அளவு குறைந்து அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பயன் பெறுவா் என புதுவை சுகாதாரத்துறை செயலா் டி. அருண் தகவல் தெரிவித்துள்ளாா்.