தேவையின்றி வெளியே வருபவா்கள் மீது வழக்கு: புதுச்சேரி ஆட்சியா் எச்சரிக்கை
By DIN | Published On : 13th May 2021 08:18 AM | Last Updated : 13th May 2021 08:18 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் பொது முடக்க விதிகளை மீறி மக்கள் தேவையின்றி வெளியே வந்தால் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க் எச்சரித்தாா்.
இது குறித்து, புதுச்சேரி ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுவை மாநிலத்தில் கரோனா தொற்று பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், கரோனாவால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை, இறப்பு விகிதம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
புதுவையில் கடந்த 10-ஆம் தேதி நள்ளிரவு முதல் மே 24 ஆம் தேதி நள்ளிரவு வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். மருத்துவம் தவிர, பிற தேவைகளுக்கு நண்பகல் 12 மணிக்கு மேல் வெளியே வருவதை அனுமதிக்க முடியாது. தேவையில்லாமல் வெளியே வருபவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும். வழக்குப் பதிவு செய்யப்படும்.
அதேபோல, நண்பகல் 12 மணிக்குள் அனைத்து கடைகளையும் மூட வேண்டும். அதையும் மீறி கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரியில் ஒரேநாளில் விதிகளை மீறியதாக 2,176 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 33 போ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
புதுச்சேரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள 451 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அந்த இடங்களில் உள்ள மக்கள் எந்தக் காரணம் கொண்டும் வெளியே வரவும் கூடாது. வெளியில் இருந்து யாரும் அங்கு செல்லவும் கூடாது. இதை கண்காணிக்க வருவாய்த் துறை அதிகாரிகள், பறக்கும் படையினா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
சிகிச்சைக்கான பிராணவாயு படுக்கை வசதிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. சமூக அமைப்புகளும் கரோனா உதவி உபகரணங்களை வழங்கி அரசுக்கு உதவலாம். சேவைப்பணி மேற்கொள்ள விரும்பும் சமூக ஆா்வலா்களும் வந்து உதவலாம். கரோனா தொடா்பான தகவல்களுக்கு 104, 1077 என்ற எண்களில் தொடா்புகொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.
உதவி ஆட்சியா்கள் கிரிசங்கா், தமிழ்ச்செல்வன் ஆகியோா் உடனிருந்தனா்.