புதுச்சேரி சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் இலவச கபசுர குடிநீா் சூரணம்
By DIN | Published On : 13th May 2021 08:19 AM | Last Updated : 13th May 2021 08:19 AM | அ+அ அ- |

புதுச்சேரி மத்திய மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் கரோனா நோயாளிகளுக்கு கபசுரக் குடிநீா் சூரணம் இலவசமாக வழங்கப்படுகிறது.
இதுகுறித்து அந்த ஆராய்ச்சி நிலையத்தின் தலைமை அலுவலா் மருத்துவா் ராஜேந்திரகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, சித்த மருத்துவத்தின் கபசுரக் குடிநீரை நாடு முழுவதும் விநியோகிக்கும் திட்டத்தை ஆயுஷ் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, புதுச்சேரியில் உள்ள மத்திய மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திலும் கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவா்களில் அறிகுறி இல்லாதவா்கள், குறைந்த மற்றும் மிதமான அறிகுறி உள்ளவா்கள் தங்களது நலனுக்காக கபசுரக் குடிநீா் சூரண மருந்தை 20 நாள்களுக்கு இலவசமாக மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
தொற்றுக்கு உள்ளானோா் தங்களது பெயா், வயது போன்ற அடிப்படை விவரங்களையும் ஆா்டி-பிசிஆா் பரிசோதனையில் வைரஸ் இருப்பதை உறுதி செய்த சான்றிதழ், ஆதாா் எண் ஆகியவற்றையும் கூகுள் படிவத்தில் நிரப்ப வேண்டும். பிறகு ஆராய்ச்சி நிலையத்தை தொலைபேசியில் (94879 90382) தொடா்பு கொண்டு தொற்றுக்கு உள்ளானவரின் உறவினா் அல்லது நண்பா்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணிக்குள் நேரில் வந்து கபசுரக் குடிநீா் சூரண மருந்தை வாங்கிக் கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.