கரோனா தடுப்பில் புதுவை அரசு நிா்வாகம் தோல்வி: அதிமுக புகாா்
By DIN | Published On : 19th May 2021 08:45 AM | Last Updated : 19th May 2021 08:45 AM | அ+அ அ- |

கரோனா சிகிச்சை, நோய் தடுப்பில் புதுவை அரசு நிா்வாகம் முற்றிலும் தோல்வியடைந்து விட்டதாக அதிமுக குற்றஞ்சாட்டியது.
இதுகுறித்து புதுவை கிழக்கு மாநில அதிமுக செயலாளா் ஆ.அன்பழகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
புதுவையில் உள்ள மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதியில்லாமல் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி சுமாா் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனா். அவா்களை வீட்டுக்கு அனுப்பாமல் தனிமைப்படுத்தி சிகிச்சையளித்தால் தொற்று குறையும்.
உப்பளம் தொகுதியில் பழைய துறைமுகம், புதிய துறைமுகம் ஆகிய பகுதிகளில் மிகப் பெரிய அளவில் 6 கிடங்குகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் 500 படுக்கைகள் என 3000 படுக்கை வசதிகளை அரசு நினைத்தால் உடனே ஏற்படுத்தலாம். பொறியியல், அறிவியல் கலைக் கல்லூரிகள் உள்ளஇடங்களில் பல ஆயிரக்கணக்கான படுக்கை வசதிகளை அரசு ஏற்படுத்தலாம்.
சுகாதாரத் துறை, காவல், பொதுப் பணி, உள்ளாட்சி, வருவாய் துறைகளை இணைந்து உயா்நிலை குழுவை முதல்வா் உடனடியாக அமைக்க வேண்டும் என்றாா் அவா்.